தாராபுரத்தில் சாலையோரம் மண்ணை கொட்டி வைத்து இருப்பதால் போக்குவரத்து நெரிசல்


தாராபுரத்தில் சாலையோரம் மண்ணை கொட்டி வைத்து இருப்பதால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 14 Jun 2019 3:45 AM IST (Updated: 14 Jun 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் சாலையோரம் மண்ணை கொட்டி வைத்து இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க வில்லை என்றால் சாலைமறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தாராபுரம், 

தாராபுரம் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இடம் பூக்கடை கார்னர்தான். இந்த இடத்தில் நல்லம்மன் நாய்க்கன் பேட்டைரோடு, அண்ணாசிலைரோடு, பெரியகடைவீதிரோடு, பொள்ளாச்சிரோடு என 4 சாலைகள் சந்திப்பு உள்ளது. மேலும் இந்த பகுதி மிகவும் குறுகலான பகுதி என்பதால், எந்தநேரமும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.

பூக்கடை கார்னர் பகுதியைக் கடந்து தான் சர்ச்ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் 2 பள்ளிகளுக்கு, சுமார் 2 ஆயிரம் குழந்தைகள் காலையிலும் மாலையிலும் சென்று வருகிறார்கள். அதேபோல் பொள்ளாச்சிரோட்டில் உள்ள நகராட்சி பள்ளிக்கும், சுமார் 500 குழந்தைகள் சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் பூக்கடை கார்னர் பகுதியில் வடிகால் கட்டும் பணியை கடந்த 4 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக எந்திரங்களைக் கொண்டு சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளத்தில் தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை ரோட்டில் கொட்டிவைத்துள்ளனர். ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் உள்ள இடத்தில், சாலையில் நீண்ட தூரத்திற்கு மண்ணை கொட்டி வைத்ததால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் முன்பு இருந்ததைவிட போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவிட்டது.

சாலையில் பொது மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகளுக்கு இது குறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொது மக்கள் அவதிப்படுகிறார்கள். மேலும் பள்ளம் தோண்டி அப்படியே விட்டுவிட்டதால், அந்த பகுதியில் உள்ள கடைகளை கடந்த 4 நாட்களாக திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வடிகால் கட்டும் பணியோ, ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய முடியாமல் போலீசார் திணறுகிறார்கள். பொது மக்கள் நலன் கருதி, சாலையில் கொட்டப்பட்டுள்ள மண்ணை உடனடியாக அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தப்போவதாக, கட்சியின் மாவட்ட செயலாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Next Story