தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முன்னேற்பாடுகள் தீவிரம்


தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முன்னேற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 14 Jun 2019 4:15 AM IST (Updated: 14 Jun 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மீன்பிடி தடைக்காலம் இன்று (வெள்ளிக்கிழமை)யுடன் முடிவடைகிறது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

புதுச்சேரி, 

கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலமாக அறிவித்துள்ளன. அதன்படி இந்த ஆண்டும் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. சிறு படகுகள் மூலம் மட்டும் மீனவர்கள் கடலோர பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர்.

தடைக்காலத்தில் பல மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், வலைகள், உபகரணங்களை சீரமைப்பது என பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த மீன்பிடி தடைக்காலம் இன்று (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.

நாளை (சனிக்கிழமை) அதிகாலையில் இருந்து விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இருக்கின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் சில மீனவர்கள் தங்களது படகுகளை கடலுக்குள் இயக்கி மீன்பிடிப்பதற்கான வெள்ளோட்டம் மேற்கொண்டனர். அவர்கள் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து முகத்துவாரம் வரை சென்று திரும்பினர்.

நேற்று அவர்கள் விசைப் படகுகளுக்கு தேவையான டீசலை ஏற்றினார்கள். அதேபோல், மீன்களை பிடித்து பதப்படுத்துவதற்காக ஐஸ் கட்டி, மீன்பிடி வலை, குடிநீர் கேன், சாப்பாடு தயார் செய்வதற்கான பொருட்கள் ஆகியவற்றை விசைப்படகுகளில் ஏற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

Next Story