ஆசனூர்-பண்ணாரியில் எடைமேடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


ஆசனூர்-பண்ணாரியில் எடைமேடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 14 Jun 2019 4:30 AM IST (Updated: 14 Jun 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பு காரணமாக ஆசனூர் மற்றும் பண்ணாரியில் எடைமேடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.

தாளவாடி,

சத்தியமங்கலம் அருகே தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பாதை வழியாக மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இதில் அதிக பாரம் ஏற்றியபடி திம்பம் மலைப்பாதையில் உள்ள வளைவுகளில் செல்லும் கனரக வாகனங்கள் பழுது மற்றும் விபத்து காரணமாக அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இதன்காரணமாக திம்பம் மலைப்பாதை வழியாக அதிகபாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி மாவட்ட நிர்வாகம் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்கள் திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல தடை விதித்தது.

மேலும் தாளவாடி அருகே உள்ள ஆசனூர் சோதனைச்சாவடியிலும், சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் எடை மேடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இந்தப்பணிகள் மந்தமாக நடந்து வந்ததோடு, கிடப்பில் போடப்பட்டது. இதனால் கனரக வாகனங்களை அதிகாரிகள் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் ஹசன் நகருக்கு சென்ற லாரி ஒன்று திம்பம் மலைப்பாதையில் உள்ள 15-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பழுதாகி நின்றுவிட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அந்த வழியாக வந்த லாரி, பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் மேற்கொண்டு செல்லாமல் வரிசையாக அணிவகுத்து நின்றன.

அப்போது அந்த வழியாக காரில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் வந்தபோது அவரும் போக்குவரத்து பாதிப்பில் சிக்கினார். இதைத்தொடர்ந்து கலெக்டர் கதிரவன், போலீசார் உதவியுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் கேட்டு அறிந்தார். இதில் அதிகாரிகள், ‘ஆசனூர் மற்றும் பண்ணாரில் எடை மேடை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. அதனால்தான் கனரக வாகனங்களை கண்காணிக்க முடியவில்ைல. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது’ என்றனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கதிரவன், கிடப்பில் போடப்பட்ட எடை மேடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்காரணமாக ஆசனூர் மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடியில் தடுப்புகள் மற்றும் எடைமேடை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

Next Story