உத்திரமேரூர் அருகே சுடுகாட்டு பாதை கேட்டு பொதுமக்கள் மறியல்
உத்திரமேரூர் அருகே சுடுகாட்டு பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்த மதூர் கிராமத்து மக்கள் தனிநபர் ஒருவரின் வயல் வழியாக சுடுகாட்டு பாதையை பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த நபர் தன்னுடைய நிலத்தில் கட்டிடம் கட்ட உள்ள நிலையில் சுடுகாட்டு பாதை தடுக்கப்படுகிறது.
இதனால் உயிரிழந்தவர்களின் உடலை எடுத்து செல்ல பாதை இல்லாததால் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இது தொடர்பாக பல முறை தாசில்தார் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று அந்த பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு மனித உருவபொம்மையை வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாலவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் அந்த இடத்தில் அரசு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து நிலத்தை விலை கொடுத்து வாங்கி சுடுகாட்டு பாதை அமைத்து தர கோரிக்கை விடுத்தனர்.
போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story