கடலூர் முதுநகர் அருகே, சுருக்குமடி மீன்பிடி வலைகளை ஏற்றிச்சென்ற 5 லாரிகள் பறிமுதல்
கடலூர் முதுநகர் அருகே சுருக்குமடி மீன்பிடி வலைகளை ஏற்றிச்சென்ற 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைக்கோரி, சோனாங்குப்பம், ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரை (அதாவது நாளை) மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. இந்த மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் படகு என்ஜின்களை பழுது பார்ப்பது, மீன்பிடி வலைகளை சீரமைப்பது, படகுகளுக்கு புதிதாக வர்ணம் தீட்டுவது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிவடையும் தருவாயில் உள்ளதால், மீனவர்கள் தங்கள் படகுகளில் மீன்பிடி வலைகளை ஏற்றுவது, டீசலை நிரப்புவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஐஸ்கட்டிகளையும் படகுகளில் ஏற்றும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை மீனவர்கள், தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தில் இருந்து லாரிகளில் சீரமைக்கப்பட்ட மீன்பிடி வலைகளை ஏற்றிக்கொண்டு கடலூர் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கடலூர் முதுநகர் அருகே உள்ள சிவானந்தபுரம் என்ற இடத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், அந்த வழியாக மீன்பிடி வலைகளை ஏற்றி வந்த 5 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த லாரிகளில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி மீன்பிடி வலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மீன்பிடி வலைகள் மற்றும் லாரிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், அவற்றை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினர். மேலும், கடலூர் துறைமுகத்துக்கு தடை செய்யப்பட்ட சுருக்குமடி மீன்பிடி வலைகள் கொண்டுவரப்படுகிறதா? என கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மேற்பார்வையில் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி நிருபர்களிடம் கூறுகையில், சுருக்குமடி மீன்பிடி வலைகளை ஏற்றி வந்த 5 லாரிகளை கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின் பேரில் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெறும் என்றார்.
சுருக்குமடி மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள், தங்களது குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story