அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம்
சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள சிக்னல் அருகே சாலையில் 10 அடி ஆழ பள்ளம் திடீரென ஏற்பட்டது, அதிகாலை நேரத்தில் இந்த பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் உயிர் தப்பினர்.
அடையாறு,
சென்னை அடையாறு மத்திய கைலாஷ் ராஜீவ் காந்தி சாலை சந்திப்பு சிக்னல் அருகே நேற்று அதிகாலை சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. சுமார் 15 அடி அகலம் 10 அடி ஆழத்தில் ஏற்பட்ட இந்த திடீர் பள்ளத்தால் சாலையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கேபிள்கள், கழிவு நீர் குழாய்கள் பலத்த சேதம் அடைந்தன.
சாலையில் பள்ளம் ஏற்பட்டதை கண்ட பொதுமக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்தனர். மேலும் அரசு அதிகாரிகள் பள்ளத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
அதனை உரிய முறையில் சரி செய்வதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்தனர். இதைத்தொடர்ந்து 2 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் பள்ளத்தில் இருந்த இடிபாடுகளையும், சகதிகளையும் அகற்றினர்.
எப்போதும் அதிக போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் அதிகாலை நேரத்தில் இந்த பள்ளம் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் மத்திய கைலாஷ் பகுதியில் நேற்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கனரக வாகனங்கள் உள்ளிட்ட அதிக வாகனங்கள் செல்வதால் ஏற்படும் அதிர்வு காரணமாக எதிர்பாராத விதமாக சாலையின் கீழே மண்சரிவு ஏற்பட்டதால் இந்த பள்ளம் உருவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ரெயில் நிலையம், பஸ் நிலையம், பள்ளி, மருத்துவமனை, பல்கலைக்கழகம் மற்றும் பல நிறுவனங்கள் சுற்றியுள்ள கடும் போக்குவரத்து நெரிசல் மிக்க மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள சாலையில் பகலில் இது போன்ற சம்பவம் நடந்திருந்தால் பெரும்உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையின் உறுதித்தன்மையை சோதித்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் இதுபோன்ற சம்பவங்கள் இனி ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். சென்னையின் முக்கிய சாலையான மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story