அருப்புக்கோட்டையில், காலி குடங்களுடன் பெண்கள் மறியல்


அருப்புக்கோட்டையில், காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
x
தினத்தந்தி 14 Jun 2019 3:45 AM IST (Updated: 14 Jun 2019 5:01 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் வைகை அணையிலிருந்து கிடைக்கப்பெறும் தண்ணீர், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிடைக்க பெறும் தண்ணீரை கொண்டு நகராட்சி நிர்வாகம் 36-வார்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்து வந்தது. நாளடைவில் கடும் வெயில் காரணமாக வைகை அணையிலிருந்து கிடைக்கப்பெற்ற குடிநீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதனால் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கப்பெற்ற குடிநீரை கொண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வந்தது.

இந்த நிை-லையில் 24 மற்றும் 25-வது வார்டு பகுதியில் கடந்த 38 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நேற்று காலை பாவடித்தோப்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காலை நேரம் என்பதால் அருப்புக்கோட்டையிலிருந்து விருது நகர் சாலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற பஸ்கள் உள்பட ஏராளமான பஸ்களும், வாகனங்களும் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நகராட்சி உதவி பொறியாளர் காளஸ்வரி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக 2 வார்டு பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றதன் பேரில் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story