பணியில் இருந்தபோது கைதான சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பணியில் இருந்தபோது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குமரவேல் கடந்த 1996-ம் ஆண்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். சில மாதங்களில் 4 போலீஸ் நிலையங்களுக்கு தொடர்ச்சியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
கடைசியாக சூலக்கரை போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது குறித்து விளக்கம் கேட்பதற்காக, அவர் 1.8.2000 அன்று விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டுவை சந்திக்க சென்றுள்ளார். ஆனால் அவர் சந்திக்கவில்லை.
மாறாக, அங்கிருந்த போலீஸ் சூப்பிரண்டுவின் டிரைவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக குமரவேல் மீது புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து, குமரவேலை கைது செய்தனர். இதையடுத்து அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கை குறித்து குமரவேல் மேல் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனாலும் எந்த பதிலும் இல்லாததால் அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பொய் புகாரின்பேரில் வழக்குபதிவு செய்து, சீருடையில் இருந்த என்னை கைது செய்து காவலில் வைத்தது மனித உரிமையை மீறும் செயல்.
இதனால் நான் மிகவும் அவமானத்துக்கு ஆளாகியுள்ளேன். என் மீதான நடவடிக்கை இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர் இழப்பீடு கேட்டு இங்கு வழக்கு தொடர முடியாது என்று கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் குமரவேல் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சி.சரவணன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் மீதான புகாரின்பேரில் பதிவான வழக்கை திரும்பப்பெற்றுவிட்டதாக போலீசார் கூறியுள்ளனர். இது ஏற்புடையதாக இல்லை. சீருடையில் இருந்த மனுதாரர் கைது செய்யப்பட்டு, அரை மணி நேரம் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மனுதாரரை கைது செய்ததில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. போலீஸ் அதிகாரிகள் தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மனுதாரர் ரூ.1 கோடி இழப்பீடு கேட்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
இருந்தபோதும் இந்த வழக்கின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story