25 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க வங்கிக்கடன் - கலெக்டர் வீரராகவராவ் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.5 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க 25 சதவீத மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படுவதாக கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டம், பட்டயப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்த தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் தொடங்க குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை தொழில் திட்டங்களுக்கு வங்கிக்கடன் பெற பரிந்துரைக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் நாளில் விண்ணப்பதாரர் 21 வயது பூர்த்திஅடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருப்பின் 35 வயதிற்கு மிகாமலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர். திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினராக இருப்பின் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வருமான வரம்பு எதுவும் இல்லை. 3 ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும். தொழில் முனைவோர் பொதுப் பிரிவினராக இருந்தால் திட்ட மதிப்பீட்டில் சொந்த முதலீடு 10 சதவீதமாகவும், சிறப்பு பிரிவினராக இருந்தால் 5 சதவீதமாகவும் இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.30 லட்சம் மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். தனிநபர் புதிய தொழில் முனைவோர், பங்குதாரர் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இந்த நிலையில் நீட்ஸ் திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் பட்டியலில் மேலும் புதிய 16 தொழில்கள் சேர்க்கப்பட்டுஉள்ளது. ஜே.சி.பி., பொக்லைன், எல்.பி.ஜி. புல்லட் டேங்க் டிரக், கன்டெய்னருடன் கூடிய டிரக் ரோடு ரோலர், கலவை எந்திரம், டேங்கர் டிரக், கிரேன்கள் மற்றும் போர்க் லிப்ட் கருவிகள், கான்கிரீட் மிக்சிங் கருவிகள், ஆழ்துளை கிணறு வாகனங்கள், ரெடிமிக்ஸ் கான்கிரீட் கேரியர், இழுவை வாகனங்கள், கான்கிரீட் பைலிங் வாகனங்கள், வாயுக்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள், மொபைல் கேட்டரிங் சர்வீஸ் மற்றும் உணவகங்கள் ஆகிய தொழில்கள் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
எனவே தொழில் தொடங்க விரும்பும் முதல் தலைமுறை தொழில் முனைவோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04567-230497 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
Related Tags :
Next Story