ராமநாதபுரம் அருகே, நள்ளிரவில் பாலத்தில் கார் மோதி டிரைவர் சாவு


ராமநாதபுரம் அருகே, நள்ளிரவில் பாலத்தில் கார் மோதி டிரைவர் சாவு
x
தினத்தந்தி 14 Jun 2019 3:30 AM IST (Updated: 14 Jun 2019 5:01 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே நள்ளிரவில் பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். காரில் வந்த தாயும், மகனும் படுகாயமடைந்தனர்.

ராமநாதபுரம்,

கீழக்கரை ஈசா தண்டையார் தெருவை சேர்ந்தவர் சிராஜ்தீன். இவரது மனைவி ரகுமத்துநிசா(வயது29). இவர்களுக்கு 5 வயதில் முகமது பதீன் என்ற மகன் உள்ளான். சிராஜ்தீன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ரகுமத்துநிசா பட்டுக்கோட்டையில் உள்ள நண்பரின் உதவியுடன் அங்கு வீடுபிடித்து தனது 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிராஜ்தீன் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக தெரிவித்ததால் அவருடன் போனில் பேசிவிட்டு தனது நண்பரின் காரில் மகன் முகமது பதீனுடன் நேற்று முன்தினம் இரவு பட்டுக்கோட்டையில் இருந்து வந்துள்ளார்.

இவர்கள் வந்த கார் இரவு 12 மணியளவில் ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பாலத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ரகுமத்துநிசா, முகமது பதீன், டிரைவர் பட்டுக்கோட்டை நைனாங்குளம் சிவக்கொல்லை பகுதியை சேர்ந்த முகமது பாரூக் மகன் ஜாவியத்பைசல்(28) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டிரைவர் ஜாவியத்பைசல் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் சிறுவன் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ரகுமத்துநிசா அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story