மாவட்ட செய்திகள்

உரிமை மீறல் பிரச்சினைகள், குறைகள் குறித்து 19-ந்தேதிக்குள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் மனு அளிக்கலாம் + "||" + Concerns about flaws By 19th Child Protection Officer Manualikkalam

உரிமை மீறல் பிரச்சினைகள், குறைகள் குறித்து 19-ந்தேதிக்குள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் மனு அளிக்கலாம்

உரிமை மீறல் பிரச்சினைகள், குறைகள் குறித்து 19-ந்தேதிக்குள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் மனு அளிக்கலாம்
குழந்தைகளுக்கான உரிமை மீறல் பிரச்சினைகள், குறைகள் மற்றும் தேவைகள் குறித்து வருகிற 19-ந்தேதிக்குள் திண்டுக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் மனு அளிக்கலாம் என கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தெரிவித்தார்.
திண்டுக்கல், 

குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பான பிரச்சினைகள், குறைகள் மற்றும் தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்து அவர்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கும், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதுடன் உரிமை மீறல் பிரச்சினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசால் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் குழந்தைகள் உரிமை மீறல் பிரச்சினைகள், குறைகள் மற்றும் தேவைகள் குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளிக்கலாம்.

நாடு முழுவதும் 727 மாவட்டங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் உரிமை மீறல் பிரச்சினைகள், குறைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த ஆணையம் சார்பில் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு 3 மாதங்களுக்குள் தீர்வு காணவும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும் இதற் கான முதல் கட்ட குறைதீர்க் கும் கூட்டம் வருகிற 21-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்க உள்ளது.

எனவே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பு பிரச்சினைகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் சார்ந்த பிரச்சினைகள், குழந்தை திருமணம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவர்களின் பராமரிப்பு, ஊட்டச்சத்து, வளர்ச்சி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்த மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அலுவலரிடம் வருகிற 19-ந்தேதிக்குள் அளிக்க வேண்டும்.

மேலும் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு நேரில் சென்று மனு அளிக்க விரும்புபவர்கள் 21-ந்தேதி ராமநாதபுரத்துக்கு சென்று தங்களின் மனுக்களை அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, நலப்பணிகள் துறை இணை இயக்குனர் மாலதி பிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.