பெற்றோர் கண்டித்ததால் மாயமான 5 சிறுமிகள் திருச்சியில் மீட்பு


பெற்றோர் கண்டித்ததால் மாயமான 5 சிறுமிகள் திருச்சியில் மீட்பு
x
தினத்தந்தி 14 Jun 2019 4:30 AM IST (Updated: 14 Jun 2019 5:01 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் மாயமான 5 சிறுமிகள் திருச்சியில் மீட்கப்பட்டனர்.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள செல்லக்குட்டியூரை சேர்ந்தவர் சற்குணம். இவர் குடுகுடுப்பை அடித்து குறி சொல்லும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள்கள் பெருமாயி (வயது 16), போதும்பொன்னு (12). இவள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

அதே பகுதியை சேர்ந்த குடுகுடுப்பை தொழில் செய்யும் முத்துக்குமார் மகள்கள் சின்னத்தாய் (16), சுதா (13), மனோகரன் மகள் அபிநயா (13). இவள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். மற்ற 3 சிறுமிகளும் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வருகின்றனர். 5 சிறுமிகளும் எப்போதும் ஒன்றாக இருந்துள்ளனர். அவர்களை ஒன்றாக இருக்கக் கூடாது என்று அவர்கள் பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் போதும்பொன்னு, அபிநயா 2 பேரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். அப்போது பெருமாயி, சின்னத்தாய், சுதா ஆகிய 3 பேரும் வெளியே சென்று வருவதாக வீட்டில் இருந்து புறப்பட்டனர். மாலையில் 5 சிறுமிகளும் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து பெற்றோர்கள் தங்களுடைய உறவினர்களின் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பதறி போன பெற்றோர்கள் எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 5 சிறுமிகளையும் தேடி வந்தனர்.

இதற்கிடையே மாயமான 5 சிறுமிகளும் திருச்சி மாவட்டம், குழுமணி என்ற ஊரில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த சிறுமிகளின் உறவினர்களுடன், போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் சிறுமிகள் 5 பேரையும் போலீசார் மீட்டு எரியோடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில், 5 பேரும் ஒன்றாக இருக்கக் கூடாது என்று பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாக அந்த சிறுமிகள் கூறினர். மேலும் குழுமணிக்கு ஏற்கனவே பெற்றோருடன் சென்று இருக்கிறோம். இதனால் அங்கு கோவில் திருவிழாவை பார்க்க சென்றோம். அங்கு இருந்து ஏதாவது வேலைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தோம் என்று கூறினர்.

பின்னர் சிறுமிகளுக்கு போலீசார் அறிவுரை கூறினர். அவர்களை வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். 

Next Story