குறிஞ்சிப்பாடி, நெய்வேலி பகுதியில் மழை, மின்னல் தாக்கி பெண் பலி - மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்தடை


குறிஞ்சிப்பாடி, நெய்வேலி பகுதியில் மழை, மின்னல் தாக்கி பெண் பலி - மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்தடை
x
தினத்தந்தி 14 Jun 2019 4:15 AM IST (Updated: 14 Jun 2019 5:02 AM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடி, நெய்வேலி பகுதியில் மழை பெய்தபோது மின்னல் தாக்கி பெண் பலியானார். மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது.

வடலூர், 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தையல்குணாம்பட்டினத்தை சேர்ந்தவர் கனகு மனைவி வீரம்மாள்(வயது 55). இவரும், ஆறுமுகம் மனைவி சித்ராவும்(21) அதே பகுதியை சேர்ந்த சடகோபன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலைபார்த்து கொண்டிருந்தனர். நேற்று மதியம் 3 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது.

இதில் மின்னல் தாக்கியதில் வீரம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சடகோபன்(53), சித்ரா(21) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான வீரம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் நெய்வேலி பகுதியிலும் நேற்று மாலை 4 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் நெய்வேலி வட்டம் 16-ல் உள்ள சூரிய வெளித்தெரு, ஜவகர்லால் நேரு சாலை, காமராஜர் சாலை மற்றும் வட்டம் 24 மாதாக்கோவில் அருகில் உள்ள மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மின்தடையும் ஏற்பட்டது. இதையடுத்து என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் மரங்களை வெட்டி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த திடீர் மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது.

Next Story