நீட்ஸ் திட்டத்தில், தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
நீட்ஸ் திட்டத்தில் தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஊட்டி,
படித்த மற்றும் முதல் தலைமுறை இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்து, தொழில் முனைவோர்களை உருவாக்கும் பொருட்டு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்(நீட்ஸ்) நீலகிரி மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2019-20-ம் நிதியாண்டில் நீலகிரிக்கு நீட்ஸ் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.147 லட்சம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஒதுக்கீட்டில் பழங்குடியினர் ஒரு நபருக்கு ரூ.14.80 லட்சமும், ஆதிதிராவிடர் 3 பேருக்கு ரூ.30.13 லட்சமும் சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ., அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தொழில்சார் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயதாக 35 மற்றும் சிறப்பு பிரிவினருக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினரில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையர் ஆகியோர் தகுதியானவர்கள். தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழக அரசு சார்பில் நிலம், கட்டிடம் மற்றும் எந்திரம் உள்ளடக்கிய திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை வழங்கப்படும். www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் தொழில் முனைவோர் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட திட்டத்தின் கீழ் தேயிலை பதப்படுத்தும் தொழில்கள், அடுமனை பொருட்கள் உற்பத்தி, கோக்கோ சாக்லேட், உல்லன் ஆடை, பருத்தி, சணல் மற்றும் காகித பைகள்,
ஆயத்த ஆடைகள் தயாரித்தல், கணினி மென்பொருள், வாசனை எண்ணெய்கள், தைலங்கள், இஞ்சி பூண்டு பேஸ்ட், கேரட் ஜூஸ், உருளை சிப்ஸ் போன்ற உற்பத்தி தொழில்களும், ஓட்டல், ரோடு ரோலர், பிட்டுமென் கலவை, சாலை அமைக்கும் எந்திரம், டேங்கர் லாரிகள், கிரேன், கான்கிரீட் கலவை எந்திரங்கள், மீட்பு வாகனம், உடற்பயிற்சி நிலையம், மருத்துவ சேவைகள், பொறியியல் சேவைகள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் போன்ற சேவை தொழில்களும் நீலகிரியில் தொடங்க சாத்தியக்கூறுகள் உள்ளன.
இதுகுறித்து கூடுதல் வழிகாட்டுதலுக்கு 0423-2443947, 9442643156 என்ற எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். எனவே, தகுதியும், ஆர்வமும் உள்ள படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story