நாடாளுமன்ற தேர்தலில், பொய்யான வாக்குறுதிகளால் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளால் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது என்று கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கோவை,
கோவைப்புதூரில் ரூ.10 கோடியே 88 லட்சம் செலவில் கட்டப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் 4-ம் அணியினருக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு விழா நேற்று நடந்தது. இதை சென்னையில் இருந்துவாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். கோவைப்புதூரில் நடந்த விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.
இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழக கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் எஸ்.வி.சேகர், உதவி செயற்பொறியாளர் கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
காவலர்களின் வசதிகளை மேம்படுத்திடும் வகையில், புதிய போலீஸ் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ரூ.10 கோடியே 88 லட்சம் செலவில் தமிழ்நாடு சிறப்பு காவல் 4-ம் அணியில் பணிபுரியும் காவலர்கள் குடும்பத்துடன் வசிக்கும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய 137 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் நடந்த அ.தி.மு.க. கலந்துரையாடல் கூட்டத்தில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பற்றி விவாதிக்கப்பட்டது. கட்சியை எப்படி பலப்படுத்துவது என்பது பற்றியும் பேசப்பட்டது. அதில் சில அமைச்சர்கள் சொந்த காரணங்களினால் கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சியினர் அந்த கூட்டத்தில் ஏதாவது குழப்பம் நடக்கும் என்று எதிர்பார்த்தார்கள். அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. அ.தி.மு.க.வில் தொண்டர்கள் தான் தலைவர்கள். இருந்தாலும் தொண்டர்கள், மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று விவாதித்தோம்.
என் சொந்த துறை சார்பாகவும், அதேபோல மின்துறை அமைச்சர் அவரது துறை சார்பாகவும் தான் டெல்லியில் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினோம். கோவையை அடுத்த மரப்பாலத்தில் உள்ள ரெயில்வே பாலத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து பேசினேன். தமிழகத்துக்கு என்ன தேவையோ அதை செய்து தர மத்திய பா.ஜனதா அரசு தயாராக உள்ளது.
கோடை காலத்தில் குடிநீர் தேவை தொடர்பாக முன்திட்டமிடப்பட்டதன் அடிப்படையில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து பகுதி மக்களுக்கும் தங்கு தடையில்லா குடிநீர் வினியோகம் உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு திட்டங்கள் மூலம் 7 ஆயிரம் எம்.எல்.டி. குடிநீர் வினியோகம் செய்து வருகிறோம். குடிநீர் பயன்பாடு தவிர மற்ற உபயோகத்துக்காக எங்கெங்கு வாய்ப்புகள் உள்ளதோ அந்த இடங்களில் ஆழ்துளை கிணறு மூலம் நீர் எடுத்து வினியோகித்து வருகிறோம்.
நாங்கள் செய்வதை தான் சொல்கிறோம். இந்தியாவிலேயே ஏழைகளுக்கு அதிக வீடுகள் கட்டிக் கொடுத்தது தமிழக அரசு தான். ஆனால் செய்ய முடியாததையெல்லாம் தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
தி.மு.க.வினர் தவறான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் நாங்கள் மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுத்து வருகிறோம். இதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். வருகிற உள்ளாட்சி தேர்தலில் இதன் முடிவு தெரியும். கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை சூலூர் சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது. அ.தி.மு.க. பெரிய வாக்கு வங்கியை பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story