பொள்ளாச்சி அருகே பரபரப்பு, அரசு பஸ்சின் மேற்கூரை காற்றில் பறந்தது


பொள்ளாச்சி அருகே பரபரப்பு, அரசு பஸ்சின் மேற்கூரை காற்றில் பறந்தது
x
தினத்தந்தி 14 Jun 2019 4:30 AM IST (Updated: 14 Jun 2019 5:02 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே அரசு பஸ்சின் மேற்கூரை காற்றில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சாலையில் வேறு எந்த வாகனங்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பொள்ளாச்சி,

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொள்ளாச்சியில் இருந்து கோவை, திருப்பூர், நெல்லை, மதுரை, பழனி, சேலம், திருச்சி, கரூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களுக்கும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொள்ளாச்சியில் இருந்து வடக்கிபாளையம் வழியாக நடுப்புணிக்கு (தடம் எண் 30 )அரசு பஸ் இயக்கப்படுகின்றது. இந்த பஸ் பழுதடைந்ததால் நடுப்புணிக்கு மாற்று பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் நடுப்புணியில் இருந்து நேற்று மாலை 3 மணிக்கு பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதற்கிடையில் மாலை நேரத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. கொங்குநாட்டான் பிரிவு அருகே வந்த போது திடீரென்று பஸ்சின் மேற்கூரை பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் பறந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினார். அதன்பிறகு பயணிகளும் பயத்தில் வேகமாக பஸ்சை விட்டு இறங்கினார்கள். அரசு பஸ்சின் மேற்கூரை (தகடு) பறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பஸ்சின் மேற்கூரையை அங்கேயே போட்டு விட்டு, பயணிகளுடன் பஸ் நிலையத்துக்கு டிரைவர் பஸ்சை ஓட்டி வந்தார்.

அதன் பின்னர் அந்த பஸ்சை பொள்ளாச்சியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு கொண்டு சென்றனர். பஸ்சின் மேற்கூரையில் மழைநீர் உள்ளே விழாமல் இருக்க தகடு ஒட்டப்பட்டு இருக்கும். தற்போது பலத்த காற்று வீசியதால் தகடு பறந்து இருக்கலாம் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து சம்பவம் நடந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

கொங்குநாட்டான்பிரிவு அருகில் வந்து கொண்டிருந்த போது பஸ்சின் மேற்கூரை பறந்து கீழே விழுந்தது. அப்போது பயங்கர சத்தம் கேட்டதால் பயணிகள் சிலர் பயத்தில் அலறினர். நல்லவேளை அந்த வழியாக சாலையில் வேறு எந்த வாகனங்களும் செல்லவில்லை.

மேலும் ஆட்களும் நடந்து செல்லவில்லை. இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பொள்ளாச்சி பகுதியில் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. முறையாக பராமரிப்பதில்லை. இதன் காரணமாக அடிக்கடி பாதியில் நின்று விடுகின்றன. எனவே கிராமப்புறங்களுக்கு நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story