ஆன்மிக சுற்றுலா சென்று வெயிலுக்கு பலியான மேலும் 3 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு


ஆன்மிக சுற்றுலா சென்று வெயிலுக்கு பலியான மேலும் 3 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 14 Jun 2019 4:00 AM IST (Updated: 14 Jun 2019 5:02 AM IST)
t-max-icont-min-icon

வடமாநிலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வெயிலுக்கு பலியான மேலும் 3 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கோவை,

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 68 பேர் கடந்த 3-ந்தேதி வடமாநிலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் ஆவார்கள்.

அவர்கள், உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி, ஆக்ரா பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்றுவிட்டு கடந்த 10-ந் தேதி ஆக்ராவில் இருந்து கேரள எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தனர். அப்போது வெயில் 118 டிகிரியாக வாட்டி வதைத்தது.

இதனால் கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியை சேர்ந்த கலாதேவி (வயது 58), தெய்வானை (74), பச்சையா (80), குன்னூர் ஓட்டுப்பட்டரையை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் சுப்பையா(71), பாலகிருஷ்ணன்(67) ஆகிய 5 பேரும் வெயிலின் வெப்பம் தாங்காமல் பாதிக்கப்பட்டனர். அந்த ரெயில் ஜான்சி ரெயில் நிலையம் அருகே வந்தபோது அவர்கள் 5 பேரும் ரெயிலுக்குள் மயங்கி விழுந்தனர்.

இதனை பார்த்த மற்ற பயணிகள் ரெயில்வே நிர்வாகத் துக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் ஜான்சி ரெயில் நிலையம் வந்ததும் டாக்டர்கள் விரைந்து 5 பேரையும் சோதனை செய்தனர். இதில் 3 பேர் இறந்தது தெரியவந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். 5 பேரின் உடல்களும் ஜான்சி நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதையடுத்து குன்னூரை சேர்ந்த பாலகிருஷ்ணன், சுப்பையா, கோவையை சேர்ந்த கலாதேவி ஆகியோரின் உடல்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது.

சுப்பையாவின் மகன் நந்தகுமாரிடம் 2 உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. கலாதேவியின் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தெய்வானை, பச்சையா ஆகிய 2 பேரின் உடல்கள் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று காலை 5 மணிக்கு அந்த ரெயில் கோவை வந்தது. அங்கு காத்திருந்த உறவினர்களிடம் 2 பேரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. அந்த உடல்களை உறவினர்கள் கண்ணீர்மல்க பெற்றுச்சென்றனர்.

Next Story