மாவட்ட செய்திகள்

நெல்லை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலையில் மேலும் 5 பேர் கைது + "||" + Murder of Indian democratic rights activist Five more arrested

நெல்லை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலையில் மேலும் 5 பேர் கைது

நெல்லை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலையில் மேலும் 5 பேர் கைது
நெல்லை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலையில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை, 

நெல்லை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலையில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை 

நெல்லை தச்சநல்லூர் அருகே கரையிருப்பு ஆர்.எஸ்.ஏ. நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் அசோக் (வயது 23). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளராக இருந்தார். மேலும் இவர் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த 12–ந் தேதி இரவு வேலைக்கு செல்வதற்காக கரையிருப்பு மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது, அங்கு பதுங்கி இருந்த கும்பல், அசோக்கை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. பின்னர் அவரது உடலை அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் வீசி விட்டு சென்றது.

தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட அசோக்கின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முன்விரோதம் 

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட அசோக் கடந்த ஏப்ரல் மாதம் 27–ந்தேதி தன்னுடைய தாய் ஆவுடையம்மாளுடன் வயலுக்கு சென்று விட்டு, புல் கட்டுடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். சிதம்பரநகர் அருகே வந்தபோது, அங்கு நின்ற பேச்சிராஜனின் மீது புல் கட்டு உரசியது.

இதனால் ஆத்திரம் அடைந்த பேச்சிராஜன், ஆவுடையம்மாளை தாக்கினார். இதுதொடர்பாக இரு தரப்பினரும் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். பேச்சிராஜன் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த முன்விரோதம் காரணமாக அசோக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

சாலைமறியல் 

அசோக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் நடந்தது. கரையிருப்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலமுருகன் தலைமையில், அக்கட்சியினர், உறவினர்கள், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், நெல்லை உதவி கலெக்டர் மணீஸ் நாரணவரே மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அசோக்கை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட அசோக்கின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய ஏற்பாடு செய்யப்படும், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. மற்ற கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. அசோக் உடலை வாங்குவதாக உறவினர்கள் ஒப்புக்கொண்டனர்.

உடல் ஒப்படைப்பு

இதையடுத்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்த அசோக்கின் உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய துணை பொதுச்செயலாளர் முகமது ரியாஸ், அசோக்கின் உடலுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இறுதி ஊர்வலமாக... 

பின்னர் காலை 11 மணி அளவில் அசோக்கின் உடலை வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஊர்வலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து வந்தனர். மதியம் 2 மணி அளவில் அசோக்கின் உடல் கரையிருப்புக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், உறவினர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அசோக்கின் இறுதி ஊர்வலம் நடந்தபோது, நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பாஸ்கரன் மேற்பார்வையில், துணை கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கரையிருப்பு, சிதம்பரநகர் பகுதியில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என சோதனை நடத்தினர்.

அசோக்கின் இறுதிச்சடங்கு முடிந்ததும், மதியம் 3 மணி அளவில் நெல்லை தாசில்தார் சுப்பிரமணியன், அசோக்கின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர், அசோக்கின் தந்தை முருகன், தாய் ஆவுடையம்மாள் ஆகியோரிடம் அரசு சார்பில் முதல்கட்ட நிவாரண உதவியாக ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். ஆதி திராவிடர் நலத்துறை தனி துணை தாசில்தார் பத்மபிரியா, வருவாய் ஆய்வாளர் ரங்கராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் 5 பேர் கைது 

அசோக் கொலை வழக்கு தொடர்பாக தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன், சப்–இன்ஸ்பெக்டர் வேல்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் கரையிருப்பை சேர்ந்த முருகன் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியான கரையிருப்பை சேர்ந்த சுந்தரம் மகன் பேச்சிராஜன் (19), அவருடைய நண்பரான சுப்பையா மகன் முத்துபாண்டி (27), முருகனின் சகோதரர்களான பாலு (48), மூக்கன் (45), கணேசன் (43) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ராமச்சந்திரன், சுந்தரம் ஆகியோரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.