வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே பாலத்தில் இருந்து பாலாற்றில் தலைகீழாக பாய்ந்த கார்


வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே பாலத்தில் இருந்து பாலாற்றில் தலைகீழாக பாய்ந்த கார்
x
தினத்தந்தி 15 Jun 2019 4:30 AM IST (Updated: 14 Jun 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு கார் ஒன்று பாலாற்றுக்குள் தலைகீழாக பாய்ந்தது. இதில் கார் நொறுங்கியது. டிரைவரின் கால் முறிந்தது.

வேலூர், 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருடைய மகன் விக்்னேஷ் (வயது27). கார் டிரைவர். இவருடைய நண்பர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் இரவு காட்பாடியில் நடந்தது.

இதில் கலந்துகொள்வதற்காக விக்னேஷ் ஆம்பூரில் இருந்து காரில் காட்பாடிக்கு வந்துள்ளார். திருமண வரவேற்பு முடிந்ததும் நள்ளிரவு 2 மணியளவில் ஆம்பூருக்கு புறப்பட்டார். பாலாற்றின் பழைய பாலம் வழியாக காட்பாடியில் இருந்து வேலூர் புதிய பஸ்நிலையம் நோக்கி காரை ஓட்டிவந்தார்.

புதிய பஸ்நிலையம் அருகில் வந்தபோது காரின் முன்பக்க டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் வலதுபக்கத்தில் உள்ள தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பாலாற்றுக்குள் தலைகீழாக பாய்ந்தது.

இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. கார் தலைகீழாக விழுந்தபோது, அதை ஓட்டிவந்த விக்னேஷ் காரில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

அப்போது அந்தவழியாக சென்றவர்கள் இதை பார்த்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று விக்னேசை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story