வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம்


வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2019 4:30 AM IST (Updated: 14 Jun 2019 11:04 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினை குறித்து நேற்று துரைமுருகன் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். பின்னர் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று துரைமுருகன் கூறினார்.

வேலூர், 

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ தலைமையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆர்.காந்தி, எல்.ஈஸ்வரப்பன், ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், நல்லதம்பி, காத்தவராயன் ஆகியோர் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமனை சந்தித்து கோரிக்கை மனுகொடுத்தனர்.

அப்போது வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சம் குறித்தும், அதற்கு உடனடி தீர்வுகாணவேண்டும் என்றும், மணல் கொள்ளை குறித்தும் கோரிக்கை வைத்தனர். பின்னர் வெளியே வந்தபோது துரைமுருகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் 13 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் 8 பேர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள். அ.தி.மு.க.வினர் 5 பேர் மட்டுமே உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் வெயிலை விட குடிநீர் பஞ்சம்தான் அதிகமாக இருக்கிறது. எங்கள் கட்சி சார்பில் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றிதெரிவிக்க சென்றால் பொதுமக்கள் காலிக்குடங்களுடன்தான் வந்து கோரிக்கை வைக்கின்றனர்.

கடந்த 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற தண்ணீர் பஞ்சத்தை பார்த்ததில்லை. பாலாறு மணலை சுரண்டி கொள்ளையடித்து விட்டனர். இதுகுறித்து கலெக்டரிடம் கேட்டால் மணல் அள்ள அனுமதி கொடுக்கவில்லை என்கிறார். போலீஸ் மூலம் மறைமுகமாக அனுமதி கொடுத்து வசூல் செய்கிறார்கள்.

மாவட்ட அமைச்சர், கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர்கள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாதது வருத்தமளிக்கிறது. நடைமுறை சிக்கல், அதிகாரிகளின் மெத்தன போக்கு குறித்து கலெக்டரிடம் விளக்கி இருக்கிறோம்.

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பணம் இருக்கிறது. ஆனால் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் கொடுப்பதில்லை. கலெக்டர் கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநிலை நீடித்தால் கிளர்ச்சி வெடிக்கும். பசியைகூட பொறுத்துக்கொள்ளலாம். தாகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. இதனால் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும்.

ஆட்சியாளர்களுக்கு மக்களை பற்றி கவலையில்லை. ஒற்றையா? இரட்டையா? என்பதில்தான் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். எதிர்க்கட்சியான நாங்கள் மக்கள் பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளோம். உடனடியாக அமைச்சர், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு சிறப்பு குழு அமைக்கவேண்டும்.

குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பழுதுபார்ப்பதாக கூறுகிறார்கள். குடிநீருக்கு நிதி ஒதுக்கினால் அதில் குப்பைத்தொட்டி வாங்குகிறார்கள். குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story