எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித்தருவதாக ரூ.27 லட்சம் மோசடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித்தருவதாகக்கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்துவிட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
வேலூர்,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன். இவர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் எனது மகள் எம்.பி.பி.எஸ். படிக்க கடந்த 2018-ம் ஆண்டு சீட் வாங்கித்தருவதாக திருப்பத்தூர் வள்ளுவர் நகரை சேர்ந்த ஒருவர் கூறினார். இதற்காக பலமுறை பேசினார். பின்னர் பல தவணைகளாக ரூ.27 லட்சம் கேட்டார்.
இதற்காக வட்டிக்கு பணம் வாங்கிக்கொடுத்தேன். ஆனால் அவர் கூறியபடி எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித்தரவில்லை. பணத்தை திருப்பிகேட்டதற்கும் தரவில்லை. இதனால் நாங்கள் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக எனது மகள் 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனவே பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த நபர்மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
அதேபோன்று திமிரியை அடுத்த மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் கொடுத்துள்ள புகார் மனுவில் விமான நிலையத்தில் வேலைவாங்கித்தருவதாக தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து என்னுடைய போனுக்கு அழைப்பு வந்தது. ரூ.32,800 வங்கியில் செலுத்தினால் பணிநியமன ஆணை வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
அதன்படி பணம் செலுத்தினேன். ஆனால் வேலைவாங்கித்தராமல் ஏமாற்றிவிட்டார்கள். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், பணத்தை பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொள்கி்றேன் என்று கூறி உள்ளார்.
Related Tags :
Next Story