கோவையில் மீண்டும் கைவரிசை, ஏ.டி.எம். மில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய மர்ம ஆசாமிகள்
ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய மர்ம ஆசாமிகளை அடையாளம் காண கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
கோவை,
கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏ.டி.எம். களில் ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமரா பொருத்தி ஏ.டி.எம். கார்டுகளில் உள்ள தகவல்களை திருடும் சம்பவங்கள் அதிகமாக நடந்தன.
ஏ.டி.எம்.மில் கார்டுகளை சொருகும் இடத்தில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி ஏ.டி.எம். கார்டில் உள்ள தகவல்களை திருடி போலியாக ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்கப்பட்டன. மேலும் மைக்ரோ கேமரா மூலம் பின் நம்பரை தெரிந்து கொண்டு மற்றவர்களின் வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் பணத்தை திருடி வந்தன.
இதைத்தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமராக்களை பொருத்தி தகவல்களை திருடும் மோசடி கும்பலை கைது செய்தனர்.
மேலும் வங்கி நிர்வாகங்களும் வாடிக்கையாளர்களிடம் உள்ள மேக்னடிக் கார்டுகளுக்கு பதில் சிப் பொருத்தப் பட்ட புதிய ஏ.டி.எம். கார்டுகளை வினியோகம் செய்தன. சிப் கார்டுகளை வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.மில் பொருத்தினால் ஏ.டி.எம். கார்டு வெளியே வராது. பிடித்து வைத்துக் கொள்ளும்.
இதன்மூலம் ஏ.டி.எம். கார்டில் உள்ள தகவல்களை திருட முடியாத நிலை இருந்து வந்தது. சில ஏ.டி.எம்.களில் சிப் கார்டுகளை எந்திரம் பிடித்து வைத்துக் கொண்டதும் ஏ.டி.எம். கார்டு சிக்கிக் கொண்டது என்று தவறாக புரிந்து கொண்டு பலர் ஏ.டி.எம்.கார்டுகளை எடுக்காமல் வெளியே சென்றனர்.
அடுத்து வருபவர்கள் எந்திரத்தில் உள்ள ஏ.டி.எம். கார்டுகளை எடுத்து அங்குள்ள காவலாளிகளிடம் கொடுக்கும் சம்பவங்களும் கோவையில் அடிக்கடி நடந்தன.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஸ்கிம்மர் மோசடி கும்பலின் நடமாட்டம் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மீண்டும் கைவரிசை காட்ட தொடங்கி உள்ளனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மில் பணம் நிரப்ப சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் அங்கிருந்த ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமரா பொருத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் வங்கி அதிகாரிகள் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த ஏ.டி.எம்.மில் பொருத்தப்பட்டிருந்த ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமராவை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து மர்ம ஆசாமிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். ஏ.டி.எம்.மில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கடந்த 19-ந் தேதி காலை 9 மணிக்கு 2 பேர் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்து ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமரா ஆகியவற்றை பொருத்தும் காட்சி பதிவாகியுள்ளது. எனவே அவர்களை அடையாளம் கண்டு துப்புத்துலக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏ.டி.எம். கார்டின் தகவல்கள் திருடப்படுவதை தடுப்பதற்காக தான் மேக்னடிக் ஏ.டி.எம். கார்டுகளுக்கு பதில் சிப் பொருத்தப்பட்ட ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டன. அதில் உள்ள தகவல்களையும் திருடுவதில் தற்போது மோசடி கும்பல் ஈடுபட்டுள்ளது.
சில மாதங்களாக இந்த மோசடி கும்பலின் நடமாட்டம் குறைந்திருந்தது. ஆனால் மீண்டும் அந்த கும்பல் கைவரிசை காட்டத் தொடங்கியுள்ளது. முன்பு இருந்த மேக்னடிக் கார்டில் உள்ள தகவல்களை ஸ்கிம்மர் கருவி மூலம் எளிதில் திருட முடியும். ஆனால் சிப் பொருத்தப்பட்ட ஏ.டி.எம். கார்டில் உள்ள தகவல்களை ஸ்கிம்மர் கருவி மூலம் திருடுவது சற்று சிரமம் தான். ஆனாலும் மோசடி ஆசாமிகள் அந்த தகவல்களை திருடி விடுவார்கள்.
எனவே ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க செல்பவர்கள் அங்கு ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு இருந்தால் வங்கி நிர்வாகத்துக்கோ, போலீசாருக்கோ தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story