பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க ஒவ்வொரு நிறுவனத்திலும் குழு - கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தல்


பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க ஒவ்வொரு நிறுவனத்திலும் குழு - கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 15 Jun 2019 4:30 AM IST (Updated: 14 Jun 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க ஒவ்வொரு நிறுவனமும் தனியாக குழு அமைக்க வேண்டும் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகள் இயங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், தொழிலாளர் உதவி ஆணையர் சதீஸ்குமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பணிச்சூழல் உருவாக்கவும், வேலை வாய்ப்புகளை உண்டாக்கவும் மத்திய அரசின் கடைகள் மற்றும் நிறுவனங்கள் (சேவை மற்றும் தொழிலாளர் ஒழுங்கமைப்பு) சட்ட மசோதாவை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை இயக்கிட அனுமதிக்கலாம் என்று புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி 24 மணி நேரமும் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் அல்லது கடைகள் கீழ் குறிப்பிடப்பட்டு உள்ள நடைமுறைகள், பணிச்சூழல், பாதுகாப்பு மற்றும் நிபந்தனைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

அந்த வகையில் 24 மணி நேரமும் செயல்பட விரும்பும் நிறுவனங்கள் அல்லது கடைகள் குறைந்தது 10 ஊழியர்களை கொண்டிருக்க வேண்டும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கும் நாள் குறித்த விவரங்களை கடைகள், வணிக நிறுவனங்களில் வெளிப்படையாக தெரியும் வகையில் ஒட்டப்பட வேண்டும். ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் கூடுதல் நேரத்தில் பணியாற்றினால் அதற்கான தொகை உள்ளிட்டவற்றை பணியாளர்களின் சேமிப்பு கணக்கிலேயே வரவு வைக்க வேண்டும்.

கூடுதல் வேலை நேரம் என்றால் வழக்கமான எட்டு மணி நேரம் உள்பட 10½ மணி நேரத்திற்கு மேல் வேலை பார்க்கக்கூடாது. ஒரு வாரத்தில் பணியாற்றிய நேரம் 57 மணி நேரத்திற்கு மேல் வேலைக்கு அமர்த்தக்கூடாது, பெண் ஊழியர்கள் இரவு 8 மணிக்கு மேல் பணியாற்றக்கூடாது. அப்படி பணியாற்றுவதாக இருந்தால் எழுத்து மூலம் அவர்கள் தெரிவிக்கும் சம்மத கடிதத்துடன் அவர்கள் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பணியாற்றலாம். அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை கட்டாயம் செய்ய வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட இந்த பணி நேரத்திற்கு அதிகமாக பணிகளை அளித்தால் சம்பந்தப்பட்ட வேலை அளிக்கும் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களுக்கு தகுந்த போக்குவரத்து வசதிகளை அளிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு ஓய்வறை, கழிவறை, பாதுகாப்பு அம்சங்களை வேலை வழங்கும் நிறுவனங்கள் ஏற்படுத்தி தர வேண்டும். பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் அதற்குரிய சட்டத்தின் கீழ் ஒவ்வொரு நிறுவனமும் தனியாக குழு அமைக்க வேண்டும்.

இவ்வாறு 24 மணி நேரமும் இயங்கும் நிறுவனங்களில், பின்பற்றப்பட வேண்டிய நிபந்தனைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் அதன் விதிகள் 1948-ன் படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது தொடர்பாக அனைத்து வணிக அமைப்புகளுடன் தொழிலாளர் நலத்துறை ஆலோசனை கூட்டங்கள் நடத்தி தெளிவுப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் விவரங்களுக்கு திருச்சி செங்குளம் காலனி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தையோ, புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் உள்ள தொழிலாளர் துணை ஆய்வாளர் அலுவலகத்தையோ தொலைபேசியிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story