பெரம்பலூரில், தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து
பெரம்பலூரில் பஸ்சை முந்த முயன்ற லாரி தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பெரம்பலூர்,
உத்தரபிரதேசம் மாநிலம், ஆக்ராவில் இருந்து உருளைக் கிழங்கு மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருச்சிக்கு புறப்பட்டது. அந்த லாரி நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி- ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரம்பலூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. லாரியை சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த செல்வம் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் சாலையில் முன்னால் சென்ற பஸ்சை முந்துவதற்காக லாரியை டிரைவர் வேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. அப்போது பஸ்சை முந்த முயன்றபோது சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
லாரி மோதிய வேகத்தில் தடுப்பு சுவரும் சேதமடைந்தது. இதில் லாரியின் முன்பக்கம் உள்ள சக்கரங்கள் கழன்று, லாரியின் அடியில் சிக்கியது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரியில் இருந்த சில உருளைக்கிழங்கு மூட்டைகள் சாலையில் விழுந்தன. மேலும் நள்ளிரவு நேரம் என்பதால் லாரியின் பின்னாலும், முன்னாலும் வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை உருளைக் கிழங்கு மூட்டைகள் லாரியில் இருந்து இறக்கி, மற்றொரு லாரியில் ஏற்றி திருச்சி கொண்டு செல்லப்பட்டது. பின்னர் விபத்துக்கு உள்ளான லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி- ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் எல்லையில் இருந்து, அந்த சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பு சுவர் ஆரம்பிக்கும் இடத்தில் விபத்தை தடுக்கும் வகையில் எச்சரிக்கையாக எந்தவொரு பலகையோ?, ஒளியை எதிரொலிக்கும் ஸ்டிக்கரோ? தடுப்பு சுவரில் ஒட்டப்படாததால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அந்த சாலையில் தொடங்கும் தடுப்பு சுவரில் ஒளிரும் ஸ்டிக்கர்களும், அதன் அருகே எச்சரிக்கை பலகையும் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story