கம்பம் அருகே, டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி - ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த பரிதாபம்
கம்பம் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார். ஆம்புலன்ஸ் வராததால் இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
கம்பம்,
கம்பம் சுக்காங்கல்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 30). டிராக்டர் டிரைவர். இவர், நேற்று காலையில் புதுக்குளம் சாலை சிலுவைக்கோவில் அருகில் உள்ள மானாவாரி நிலத்தில் உழவு செய்ய 18-ம் கால்வாய் கரை வழியாக டிராக்டரை ஓட்டி சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் டிராக்டரின் அடியில் சிக்கிய முத்துக்குமார் படுகாயம் அடைந்தார். காலை 7 மணிக்கு நடந்த விபத்து குறித்து யாருக்கும் தெரியவில்லை. இதனால் படுகாயங்களுடன் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து 10 மணியளவில் அந்த வழியாக வந்தவர்கள் டிராக்டர் கவிழ்ந்து கிடப்பதையும், டிரைவர் அடியில் சிக்கியிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு படையினர் உதவியுடன் டிராக்டரின் அடியில் சிக்கிய முத்துக்குமாரை மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதையடுத்து ஆட்டோவில் ஏற்றி அவரை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார். ஆம்புலன்ஸ் விரைவாக வந்திருந்ததால் அவரின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்பது பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.இதேபோல் கடந்த மாதம் 27-ந் தேதி கம்பம் பிரதான சாலையில் பஸ் விபத்தில் சிக்கி ஆசிரியையின் 2 கால்களும் சிதைந்தது. அப்போதும் ஆம்புலன்ஸ் வராததால் அதிகளவு ரத்தம் வெளியேறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்கும் பொருட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் இயங்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story