சென்னிமலை அருகே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு


சென்னிமலை அருகே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2019 11:30 PM GMT (Updated: 14 Jun 2019 6:29 PM GMT)

சென்னிமலை அருகே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சென்னிமலை,

சென்னிமலை அருகே முகாசிபிடாரியூர், ஓட்டப்பாறை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னிமலை அருகே அப்பத்தாள் கோவில் பகுதியில் ஓட்டப்பாறை பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் அந்த குடிநீர் குழாயின் அருகே சிறிய குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் பிடித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக 2 தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்தநிலையில் முகாசிபிடாரியூர் மற்றும் ஓட்டப்பாறை பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று மாலை 4 மணி அளவில் அப்பத்தாள் கோவில் அருகே சென்னிமலை-ஈங்கூர் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த வழியாக வந்த கார், பஸ், பள்ளி, கல்லூரி வாகனங்கள் மேற்கொண்டு செல்லாமல் அணிவகுத்து வரிசையாக நின்றன.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ேமலும், சென்னிமலை வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் அங்கு சென்று, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘சென்னிமலை அருகே அப்பத்தாள் கோவில் பகுதியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், அந்த குடிநீர் குழாய் அருகே மர்மநபர் ஒருவர் சிறிய குழாய் அமைத்து தண்ணீர் பிடித்து வந்து உள்ளார். இதுதொடர்பாக ஓட்டப்பாறை பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவருக்கும், முகாசிபிடாரியூரை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் நாராயணன், நாகராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

தண்ணீரை திருட்டுத்தனமாக பிடித்ததாலும், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாலும் எங்களுக்கு சீராக தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் உடைந்து காணப்படும் குடிநீர் குழாயை சீரமைப்பதோடு, அனுமதியின்றி திருட்டுத்தனமாக குடிநீர் குழாய் பதித்து தண்ணீர் பிடித்த நபரை கைது செய்ய வேண்டும்’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள், ‘உடைந்து காணப்படும் குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டு, சீராக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருட்டுத்தனமாக குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் பிடித்தவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மாலை 4.45 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தை ைகவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் இந்த சாலை சாலை மறியலால் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story