பெருந்துறை அருகே லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்; கணவன்–மனைவி பலி
பெருந்துறை அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது லாரி– மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கணவன்–மனைவி பரிதாபமாக இறந்தனர்.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள அவல்பூந்துறை வேலாங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 42). தொழிலாளி. இவருக்கும் சென்னிமலை அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த ரம்யா (32) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்தநிலையில் விவேகானந்தன் நம்பியூரில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக தன்னுடைய மனைவியுடன் சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் திருமண நிகழ்ச்சியில் கலந்துவிட்டு மீண்டும் அவல்பூந்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டு இருந்தனர்.
நேற்று மதியம் 1.30 மணி அளவில் பெருந்துறை அருகே துடுப்பதி சுடுகாட்டு பிரிவு பகுதியில் வந்தபோது சீனாபுரத்தில் இருந்து வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட விவேகானந்தனும் ரம்யாவும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிஓடிவிட்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று விபத்தில் இறந்த கணவன்–மனைவி 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.