டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனிச்சட்டம் இயற்றக்கோரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் கிரு‌‌ஷ்ணகிரியில் நடந்தது


டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனிச்சட்டம் இயற்றக்கோரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் கிரு‌‌ஷ்ணகிரியில் நடந்தது
x
தினத்தந்தி 15 Jun 2019 4:30 AM IST (Updated: 15 Jun 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கிரு‌‌ஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிரு‌‌ஷ்ணகிரி, 

கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் ஒருவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கினார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து, கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

கிரு‌‌ஷ்ணகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் தனசேகரன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கத்தின் தலைவர் கந்தசாமி, செயலாளர் கைலா‌‌ஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில், உயிர் காக்கும் டாக்டர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களை தாக்குவதை கண்டிக்கிறோம். மேலும், தொடர்ச்சியாக டாக்டர்கள் தாக்கப்படுவதை தடுக்க டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு டாக்டர்கள் பலர் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர். இதையடுத்து மருத்துவர்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story