தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் வேன்-மோட்டார் சைக்கிள் சேதம்; 2 பேர் படுகாயம்


தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் வேன்-மோட்டார் சைக்கிள் சேதம்; 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 Jun 2019 4:15 AM IST (Updated: 15 Jun 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில், வேன்-மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பல்லடம்,

பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 37). இவர் அந்த பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவர் தனது வேனை மகாலட்சுமி நகர் பிரிவு 4ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு பேக்கரி முன்பு நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அத்துடன் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளிவிட்டு டீக்கடை முன்பு நிறுத்தியிருந்த ரவியின் வேனில் மோதியது. இதில் வேன் கவிழ்ந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதியும், கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த பொருட்கள், பாத்திரங்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தது.

விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காரை ஓட்டி வந்தவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இது பற்றி பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் பல்லடம் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் திருப்பூர்- தாராபுரம் ரோடு பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த சூரியபிரகாஷ் (25) என்பது தெரியவந்தது.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த மகாலட்சுமி நகரை சேர்ந்த சந்திரமவுலீஸ்வரன் (32), பொள்ளாச்சி ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த மதிவாணன் (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மகாலட்சுமி நகர் 4 ரோடு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதில் பலர் காயம் அடைவதுடன் உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் விபத்தை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்தவிபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story