வழக்கு தொடர்பாக சேலம் மத்திய சிறை வார்டனிடம் தர்மபுரி போலீசார் விசாரணை
வழக்கு தொடர்பாக சேலம் மத்திய சிறை வார்டனிடம் தர்மபுரி போலீசார் விசாரணை நடத்தினர்.
சேலம்,
சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 850-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் அன்றாட நடவடிக்கைளை கண்காணிக்க 200-க்கும் மேற்பட்ட வார்டன்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 3 ஷிப்ட் என்ற அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் வார்டன்கள் சிறைக்குள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, நுழைவு வாயில் முன்பு தர்மபுரியை சேர்ந்த வார்டன் பெருமாள் என்பவர் மத்திய சிறைக்குள் செல்ல முயன்றபோது, திடீரென அங்கு வந்த 5 பேர் அவரை மடக்கி பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் அந்த 5 பேரின் பிடியில் இருந்து அந்த சிறை வார்டன் தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், எதற்காக என்னை பிடிக்கிறீர்கள்? என்று அவர்களிடம் கேள்வி கேட்டார். ஆனால் சிறிது நேரத்தில் அவர்கள் வார்டன் பெருமாளை வேனில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர்.
5 நிமிட நேரத்திற்குள் இந்த சம்பவம் நடந்ததால் என்ன நடக்கிறது என்பது குறித்து மற்ற வார்டன்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. சிறை முன்பே வார்டனை சிலர் வேனில் கடத்தி சென்றுவிட்டதாக அப்பகுதியில் தகவல் வேகமாக பரவியது. இதுபற்றி மத்திய சிறைத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் சேலம் மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் சிறிது நேரத்தில் வார்டன் பெருமாள் கடத்தப்படவில்லை என்பதும், அவரை அழைத்து சென்றது தர்மபுரியில் இருந்து வந்திருந்த தனிப்படை போலீசார் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், வார்டன் பெருமாள் மீது பெண் தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. தற்போது தனிப்படை போலீசார் அவரை என்ன காரணத்திற்காக விசாரணைக்கு கொண்டு சென்றார்கள் என்பது தெரியவில்லை, என்றனர்.
இதுபற்றி சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, தர்மபுரியை சேர்ந்த வார்டன் பெருமாள் என்பவர் சேலம் மத்திய சிறையில் பணிபுரிந்து வருகிறார். அவரை ஒரு வழக்கு விசாரணை சம்பந்தமாக தனிப்படை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் எது சம்பந்தமான வழக்கு என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இதுபற்றி தகவல் தெரிவிக்குமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன், என்றார்.
தர்மபுரி தனிப்படை போலீசார் அழைத்து சென்ற வார்டன் பெருமாள், சேலம் மத்திய சிறையில் இருந்து தர்மபுரிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இன்னும் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அவர் சில நாட்களாகவே தர்மபுரிக்கு செல்லாமல் சேலத்திலேயே தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் இருந்திருக்கலாம் எனவும், இதனால் அவரிடம் விசாரிப்பதற்காக தனிப்படை போலீசார் தர்மபுரிக்கு அழைத்து சென்றிருக்கலாம் எனவும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தர்மபுரியில் வைத்து வார்டன் பெருமாளிடம் தனிப்படை போலீசார் வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story