கூட்டு குடிநீர் குழாய் உடைந்ததால் ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் தண்ணீர்


கூட்டு குடிநீர் குழாய் உடைந்ததால் ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் தண்ணீர்
x
தினத்தந்தி 14 Jun 2019 10:30 PM GMT (Updated: 14 Jun 2019 6:52 PM GMT)

மானாமதுரை புது பஸ் நிலையம் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்ததால் ரோட்டில் ஆறாக ஓடி தண்ணீர் வீணாகியது.

மானாமதுரை,

மானாமதுரை அருகே ராஜகம்பீரம் வைகை ஆற்றில் இருந்து கடலாடிக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ராஜகம்பீரம் வைகை ஆற்றில் தோண்டப்பட்ட 2 திறந்த வெளி கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டு விட்டதால் வைகை ஆற்றங்கரையில் 5 இடங்களில் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு அதில் இருந்து தினசரி கடலாடிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

மேலும் ராஜகம்பீரத்தில் இருந்து 72 கி.மீ. தூரமுள்ள கடலாடிக்கு தேசிய நெடுஞ்சாலையையொட்டி குழாய் பதிக்கப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. தற்போது தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு விட்டதால், கடலாடி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு புதிதாக குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. அதுவரை பழைய குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை நான்கு வழிச்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் ரோட்டில் கனரக வாகனம் சென்றதால், ரோட்டிற்கு அடியில் சென்ற கூட்டு குடிநீர் திட்ட குழாய் அழுத்தம் தாங்காமல் உடைந்தது. இதனால் அந்த இடத்தில் இருந்து குடிநீர் அதிக அளவில் வெளியேறி சர்வீஸ் ரோடு முழுவதும் ஆறு போல் ஓடி வீணாகியது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் தண்ணீரை நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சர்வீஸ் ரோடு முழுவதும் தண்ணீர் ஆறாக ஓடியவண்ணம் இருந்ததால், கடலாடிக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கடலாடிக்கு புதிதாக குழாய் பதிக்கும் பணி நடந்து வரு கிறது. பழைய குழாயில் தற்காலிகமாகத்தான் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. விரைவில் புதிய குழாய் பதிக்கும் பணி முடிவடைந்ததும், அந்த குழாயில் தண்ணீர் திருப்பி விடப்படும் என்றனர். தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆடும் நிலையில் இது போன்று குடிநீர் வீணாகி வருவது கண்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிருப்திஅடைந்துள்ளனர்.

Next Story