ஓசூர் அருகே விரட்டியடிக்கப்பட்ட காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு மீண்டும் வந்தன


ஓசூர் அருகே விரட்டியடிக்கப்பட்ட காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு மீண்டும் வந்தன
x
தினத்தந்தி 14 Jun 2019 10:15 PM GMT (Updated: 14 Jun 2019 7:01 PM GMT)

ஓசூர் அருகே விரட்டியடிக்கப்பட்ட காட்டு யானைகள் மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு வந்தன.

ஓசூர், 

ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக 30-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டிருந்தன. பின்னர் அவைகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளுக்கு சென்று விட்டன. தற்போது சானமாவு வனப்பகுதியில் 7 யானைகள் மட்டும் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இந்த யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டிட வனத்துறையினர் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் மேளங்கள் அடித்தும், வெடி வெடித்தும் யானைகளை பென்னிக்கல் வரை வனத்துறையினர் விரட்டியடித்தனர். இந்தநிலையில் அந்த யானைகள் நேற்று முன்தினம் இரவே மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு வந்து விட்டன. இதனால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

7 காட்டு யானைகளும் ராமாபுரம் கிராமத்திற்குள் புகுந்து அங்கு விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த முட்டைக்கோஸ், தக்காளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 7 யானைகளையும் தொடர்ந்து கண்காணித்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டிட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story