காரைக்கால் நகராட்சி உத்தரவை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை; இறைச்சி வியாபாரிகள் போராட்டம்


காரைக்கால் நகராட்சி உத்தரவை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை; இறைச்சி வியாபாரிகள் போராட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2019 4:15 AM IST (Updated: 15 Jun 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

ஆடு வதை கூடத்தில் மட்டுமே ஆடுகளை அறுக்கவேண்டும் என்ற நகராட்சியின் உத்தரவை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தை இறைச்சி வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில், ஆட்டு இறைச்சி வியாபாரம் செய்வோர், ஆடுவதை கூடத்தில், மருத்துவர் பரிசோதனைக்கு பிறகே ஆடுகளை அறுக்க வேண்டும். ஆட்டிறைச்சியில் முத்திரை குத்திய பிறகே கடைகளில் விற்பனை செய்யவேண்டும் என்பது அரசின் விதிமுறையாகும்.

நாளடைவில் கண்டுகொள்ளாமல் தங்கள் இருப்பிடங்களிலேயே ஆடுகளை எந்தவித பரிசோதனையும் செய்யாமல் அறுத்து விற்பனை செய்து வந்தனர். இந்த விதிமீறல் குறித்து நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

அதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் சுபாஷ் காரைக்கால் நகராட்சியின் ஆடு வதை கூடத்தில் மட்டுமே ஆடுகளை அறுக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதை ஏற்று ஒரு சிலர் நேற்று ஆடு வதை கூடத்தில் ஆடுகளை அறுத்தனர். ஆனால் ஆடு வளர்ப்பவர்கள் மற்றும் இறைச்சி வியாபாரிகள் பலர், ஆடுவதை கூடத்தில் போதுமான தண்ணீர், மின்சாரம், சுகாதாரம் இல்லை என ஆடுகளை அறுக்க மறுத்து அங்கேயே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலுக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து போலீசாரும், நகராட்சி ஆணையரும் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story