சம்பளம் வழங்காததை கண்டித்து கம்பம் நகராட்சி அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை


சம்பளம் வழங்காததை கண்டித்து கம்பம் நகராட்சி அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 15 Jun 2019 3:45 AM IST (Updated: 15 Jun 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

சம்பளம் வழங்காததை கண்டித்து கம்பம் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

கம்பம்,

கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதியில் தினசரி சேரும் குப்பைகளை அள்ளுதல், சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்தல், டெங்கு ஒழிப்பு பணி உள்ளிட்டவைகளில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இதற்காக நிரந்தரமாக 67 துப்புரவு தொழிலாளர்களும், தனியார் நிறுவனத்தின் மூலம் தற்காலிகமாக 274 தொழிலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனத்தின் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இந்த மாதம் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் நேற்று காலை வழக்கம்போல் நகராட்சி அலுவலகத்துக்கு பணிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பணிக்கு செல்லாமல் திடீரென நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாயிலின் முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கம்பம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவடமுத்து மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் அரசக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நகராட்சி சார்பில், தனியார் நிறுவனத்துக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக சம்பளம் வழங்குவதில் காலதாமதம் என்பது குறித்து ஒப்பந்ததாரரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நகராட்சி பொறியாளர் (பொறுப்பு)செல்வராணி, நகராட்சி மேலாளர் முனிராஜ், சுகாதார அலுவலர் அரசக்குமார் மற்றும் ஒப்பந்ததாரருடன் நகராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 10-ந் தேதிக்குள் சம்பளம் வழங்கவேண்டும். இல்லையென்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story