பாட புத்தகத்தில் மதத்தை திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் நாகையில், முத்தரசன் பேட்டி
பாட புத்தகத்தில் மதத்தை திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.
நாகப்பட்டினம்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நாகையில் நேற்று நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். செய்ய நினைப்பதை பா.ஜ.க. செய்கிறது. பிளஸ்-2 பாட திட்டத்திற்கும், நீட் தேர்விற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நீட் நுழைவு தேர்வில் கேட்கப்படும் கேள்விகள், பிளஸ்-2 பாட திட்டத்தில் இடம் பெறுவது இல்லை. கல்வியில் சொந்த கொள்கையை திணிக்க நினைப்பது ஜனநாயக கடமை இல்லை.
கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வழங்க வேண்டும். மேலும் அது தொடர்பான கருத்துகளை அனுப்புவதற்கான தேதியை காலநீடிப்பு செய்ய வேண்டும். தமிழக அரசு இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
மத்திய அரசுக்கு பயந்து தமிழகத்தின் உரிமைகளை எடப்பாடி அரசு விட்டு கொடுக்கிறது. ஏற்கனவே மும்மொழி கல்வி திட்டத்தை புகுத்த மத்திய அரசு நினைத்தது. எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது. தற்போது ரெயில் நிலையங்களில் பணிபுரிவோர்கள் இந்தி மொழியில் தான் பேச வேண்டும் என்று கூறப்பட்டது. அதுவும் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேதாந்தா குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
தமிழகத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைபற்றி ஆளும் அ.தி.மு.க. அரசு கவலைப்படவில்லை. தமிழகத்தில் மோடியின் பினாமி அரசு தான் நடக்கிறது. கடந்த 7 ஆண்டு காலமாக குறுவை சாகுபடி பொய்த்து போய்விட்டது.
இந்த ஆண்டாவது தண்ணீர் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தால் ஏமாற்றம் தான் கிடைத்தது. தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும் இதுநாள் வரை தண்ணீர் திறந்து விடவில்லை. பாட புத்தகங்களில் மதத்தை திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story