கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பெண்களிடம் 16 பவுன் நகைகள் திருட்டு போலீசார் விசாரணை


கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பெண்களிடம் 16 பவுன் நகைகள் திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 Jun 2019 4:00 AM IST (Updated: 15 Jun 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பெண்களிடம் 16 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழ்வேளூர்,

கீழ்வேளூர் அருகே சிக்கல் சிங்கார காளியம்மன் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் நாகை, திருவாரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், இதனை பயன்படுத்தி கொண்டு பெண்களிடம் மர்ம நபர்கள் நகைகளை பறித்து சென்றுள்ளனர்.

இதில் சிக்கல் பகுதியை சேர்ந்த இளையராஜா மனைவி சுபா (வயது 40) என்பவரின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியையும், கீழ்வேளூரை அடுத்த வடுகச்சேரி வடக்கு தெருவை சேர்ந்த ராமமிர்தம் (70) என்பவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியையும், நாகையை அடுத்த மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த நடராஜன் மனைவி சந்திரா கைப்பையில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்து நகைகளை பறிகொடுத்த பெண்கள், கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பாபிஷேகம் காண வந்த இடத்தில் நகைகளை பறிக்கொடுத்த பெண்கள், கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Next Story