நடப்பு ஆண்டில் 138 லட்சம் டன் உணவு பொருட்கள் உற்பத்தி செய்ய இலக்கு - விவசாயத்துறை மந்திரி சிவசங்கரரெட்டி பேட்டி


நடப்பு ஆண்டில் 138 லட்சம் டன் உணவு பொருட்கள் உற்பத்தி செய்ய இலக்கு - விவசாயத்துறை மந்திரி சிவசங்கரரெட்டி பேட்டி
x
தினத்தந்தி 15 Jun 2019 1:39 AM IST (Updated: 15 Jun 2019 6:01 AM IST)
t-max-icont-min-icon

நடப்பு ஆண்டில் 138 லட்சம் டன் உணவு ெபாருட்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக விவசாயத்துறை மந்திரி சிவசங்கரரெட்டி கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக விவசாயத்துறை மந்திரி சிவசங்கரரெட்டி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் மொத்த நிலப்பரப்பு 190.50 லட்சம் எக்டேர் ஆகும். இதில் விவசாய நிலங்கள் 117.24 லட்சம் எக்டேர் ஆகும். நடப்பு ஆண்டில் 138 லட்சம் டன் உணவு பொருட்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2015-16-ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின்படி மாநிலத்தில் 86.81 லட்சம் விவசாய குடும்பங்கள் உள்ளன. இதில் சிறிய விவசாயிகளின் குடும்பங்கள் 69.80 லட்சம் ஆகும். கர்நாடகத்தில் ஆண்டுக்கு 1,156 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். இதுவரை 196.9 மில்லி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும்.

ஆனால் 129.90 மில்லி மீட்டர் மழை தான் பெய்திருக்கிறது. 34 சதவீதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 6.17 லட்சம் எக்டேரில் பயிரிடப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

இதுவரை 36 ஆயிரத்து 65 குவிண்டால் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. கிடங்குகளில் 10.46 லட்சம் குவிண்டால் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 6.38 லட்சம் டன் உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 7.94 லட்சம் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சிறுதானியங் களின் விளைச்சல் நிலப் பரப்பை 50 ஆயிரம் எக்டேராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக நடப்பு ஆண்டில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் அதிக மழை பொழிவு இருக்கிறது. இதனால் அங்கு நெல் விளைச்சலை அதிகப்படுத்தும் நோக்கத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் அதிகம் பாதிக்கப்படும் 100 தாலுகாக்களில் நீர்வளத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கதக், கோலார், சித்ரதுர்கா, கொப்பல் ஆகிய 4 மாவட்டங்களில் இஸ்ரேல் மாதிரி விவசாய முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.145.92 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 75 லட்சம் விவசாயிகளுக்கு மண் சுகாதார அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மந்திரி சிவசங்கரரெட்டி கூறினார்.


Next Story