கிராம பஞ்சாயத்துகள் வரி வசூலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் - மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பேச்சு


கிராம பஞ்சாயத்துகள் வரி வசூலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் - மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பேச்சு
x
தினத்தந்தி 15 Jun 2019 3:30 AM IST (Updated: 15 Jun 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

கிராம பஞ்சாயத்துகள் வரி வசூலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். இதில் அவர் பேசியதாவது:-

கிராமங்களில் வரிகளை வசூலிக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த வரி வசூல் மூலம் கிராம பஞ்சாயத்துகள் பொருளாதார ரீதியாக பலம் பெறும். அவ்வாறு பொருளாதாரம் பலம் பெறும்போது, தங்களுக்கு தேவையான திட்டங்களை தாங்களே செயல்படுத்த முடியும்.

மாநிலத்தில் பல்வேறு பஞ்சாயத்துகள் வரி வசூலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. ஆனால் அந்த முயற்சி பெரிய பலனை கொடுக்கவில்லை. சில கிராம பஞ்சாயத்துகள் வரி வசூலில் இலக்கை எட்டியுள்ளது. இதை முன்மாதிரியாக கொண்டு, பிற கிராம பஞ்சாயத்துகள் வரி வசூலில் ஈடுபட வேண்டும்.

தூய்மை வெல்லும் என்ற பெயரில் தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை கிராம பஞ்சாயத்துகளில் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். கிராமங்களில் குப்பைகளை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துய்மையை காப்பாற்றுவது குறித்து சுயஉதவி குழுக்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

‘ஜல அம்ருத’ திட்டத்தை கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் தீவிரமாக கருத வேண்டும். கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் தொழிலாளர்களின் உழைப்பை பயன்படுத்தி தடுப்பணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தண்ணீர் பிரச்சினையை ஓரளவுக்கு தடுக்க முடியும். இவ்வாறு மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பேசினார்.


Next Story