திருவேற்காடு நகராட்சியில் ரூ.3 கோடியில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் தீவிரம்; அதிகாரி தகவல்
பூந்தமல்லியில் உள்ள திருவேற்காடு நகராட்சியில் ரூ.3 கோடியே 11 லட்சத்தில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என அதிகாரி தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி,
கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தற்போது குடிநீர் கிடைப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு வரும் நிலையில், திருவேற்காடு நகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3 கோடியே 11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சித்ரா கூறுகையில்:–
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் இதுவரை தெரு குழாய் இணைப்புகள் மட்டுமே உள்ளது. முறையாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை. சிலர் தன்னிச்சையாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை எடுத்து உள்ளனர். இந்த நிலையில் நாள் ஒன்றுக்கு 8.02 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
ஆனால் தற்போது 7.58 மில்லியன் லிட்டர் தண்ணீர் பொதுமக்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதற்காக ரூ.3 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் 9 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைபெற உள்ளது.
இதற்காக குடிநீர் இணைப்பு தேவைப்படுவோர் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் இருந்து நகராட்சியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். குடியிருப்புகளுக்கு ரூ.5 ஆயிரம், நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம், தொழிற்சாலைகளுக்கு ரூ.15 ஆயிரம் என முன்பணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையை தவணை முறையில் செலுத்தலாம்.
மேலும் குடிநீர் இணைப்பு தேவைப்படுபவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணைப்பை முறையாக பெற்றுக்கொள்ளலாம். அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட பின்னர், தெருக்களில் உள்ள குழாய்களின் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் ஒரு வீட்டில் நபர் ஒன்றுக்கு 85 லிட்டர் என்ற கணக்கில் குடிநீர் வழங்கப்பட உள்ளது. இந்த குழாயில் மீட்டர் பொருத்தப்பட உள்ளதால் குடிநீர் வீணாவதை தடுக்க முடியும்.
குழாய்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் அது தானாக நின்று விடும். வரும் காலங்களில் சொத்துவரி, தொழில்வரியோடு சேர்த்து குடிநீர் கட்டணம் சேர்த்து கட்ட வேண்டும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் குடிநீர் இணைப்பை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இதன் பிறகு குடிநீர் இணைப்பு வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் கூறினார்.