தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை வெளியிட அவகாசம் வேண்டும்; மதுரை ஐகோர்ட்டில், தமிழக அரசு கோரிக்கை


தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை வெளியிட அவகாசம் வேண்டும்; மதுரை ஐகோர்ட்டில், தமிழக அரசு கோரிக்கை
x
தினத்தந்தி 15 Jun 2019 4:30 AM IST (Updated: 15 Jun 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை வெளியிட அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் கோரியுள்ளது.

மதுரை,

மதுரையைச் சேர்ந்த ஹக்கீம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டுக்கான தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்தது. ஆனால் 2018-2019-ம் ஆண்டுகளுக்கான தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை இதுவரை தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கவில்லை.

இதனால் தமிழகத்தில் பல்வேறு தனியார் பள்ளிகள் 2018-2019 ஆண்டுக்கான கல்விக்கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ததை விட அதிக அளவில் வசூலித்து வருகின்றன. உரிய கல்விக்கட்டண விவரங்களை சம்பந்தப்பட்ட குழு வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே வழக்கு தொடர்ந்தேன்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

அந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, கல்வி கட்டண குழு நிர்ணயித்த கட்டணத்தை இணைய தளத்திலும், பத்திரிகைகளிலும் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கல்வி கட்டண விவரங்களை வெளியிட அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story