வத்திராயிருப்பு அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்தது; காயத்துடன் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலைவீச்சு


வத்திராயிருப்பு அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்தது; காயத்துடன் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Jun 2019 11:15 PM GMT (Updated: 14 Jun 2019 8:30 PM GMT)

வத்திராயிருப்பு அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது திடீரென வெடித்ததில் 2 பேர் காயம் அடைந்தனர்.

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தெற்கு கோட்டையூர் காலனி பகுதியில் சுந்தரபாண்டியம் செல்லும் சாலையில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. தரிசாக கிடந்த நிலத்தில் நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து திடீரென பலத்த வெடிச்சத்தம் கேட்டது.

இதையடுத்து மாரிமுத்து அங்கு சென்று பார்த்த போது வெடி மருந்துகள் மற்றும் வெடி மருந்து நிரப்ப பயன்படுத்தப்பட்ட சிறிய டப்பாக்கள் கிடந்துள்ளன. இதையடுத்து வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தெற்கு கோட்டையூர் காலனி பகுதியை சேர்ந்த அழகர்சாமி (வயது 26), மாகாளி (30) ஆகிய 2 பேரும் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட போது எதிர்பாராத வகையில் அது வெடித்து சிதறியிருப்பது தெரியவந்தது.

மேலும் குண்டு வெடித்ததில் அவர்கள் 2 பேரும் காயம் அடைந்துள்ளனர். ஆனால், 2 பேரும் காயங்களுடன் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடி இருப்பது தெரியவந்தது.

காயத்துடன் இருந்த 2 பேரையும் பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் அழகர்சாமி போலீசாரிடம் சிக்கினார்.

அவரை கைது செய்த போலீசார் பின்னர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்போடு அவருக்கு சிகிச்சை தரப்படுகிறது.

மேலும் தப்பியோடிய மாகாளியை தேடி வருகின்றனர். வன விலங்குகளை வேட்டையாடுவோருக்காக நாட்டு வெடிகுண்டுகளை இவர்கள் தயாரித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர்களுக்கு மேலும் சிலருடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுவதால் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் வெடிகுண்டு தடுப்பு தனிப்பிரிவு படையினர் வந்து வெடிக்காமல் கிடந்த வெடிபொருட்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

Next Story