திருவாரூர் - காரைக்குடி அகல ரெயில் பாதையில் ரெயில்வே கேட்டுகளில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை


திருவாரூர் - காரைக்குடி அகல ரெயில் பாதையில் ரெயில்வே கேட்டுகளில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Jun 2019 4:30 AM IST (Updated: 15 Jun 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர்- காரைக்குடி அகல ரெயில் பாதையில் ரெயில்வே கேட்டுகளில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று, பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பட்டுக்கோட்டை,

இது குறித்து பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலசங்கதலைவர் என்.ஜெயராமன், செயலாளர் விவேகானந்தம் பொருளாளர் சுந்தரராஜுலு, செயற்குழு உறுப்பினர் மு.கலியபெருமாள் ஆகியோர் மத்திய ரெயில்வே மந்திரிக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்திலேயே மிகப்பழமையான காரைக்குடி-திருவாரூர் மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றுவதற்காக 2012-ம் ஆண்டு முதல் இந்த வழியில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பல்வேறு காரணங்களால் தாமதப்பட்டு 2018-ம் ஆண்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நிறைவுபெற்றது.

காரைக்குடி - பட்டுக்கோட்டை- திருவாரூர் அகல ரெயில் பாதையாக அமைக்கும் பணி நிறைவு பெற்று, ரெயிலை இயக்க பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலும் வழங்கப்பட்டுவிட்டது. 75 கி.மீட்டர் தொலைவு உள்ள காரைக்குடி- பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவு பெற்றது.

74 கி.மீட்டர் தொலைவு உள்ள பட்டுக்கோட்டை- திருவாரூர் அகல ரெயில் பாதை அமைக்கும் பணி இந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவு பெற்றது. இந்த வழித்தடத்தில் காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே சில மாதங்கள் மட்டும் (வாரம் இருமுறை) டெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த மாதம் 1-ந் தேதி முதல் திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கும், மறு மார்க்கத்தில் காரைக்குடியிலிருந்து திருவாரூருக்கும் தினசரி ரெயில் சேவையை (ஞாயிற்றுக்கிழமை தவிர) தென்னக ரெயில்வே அறிவித்தது.

திருவாரூர்-காரைக்குடி இடையே உள்ள ரெயில்வே கேட்டுகளுக்கு நிரந்தர பணியாளர்கள் நியமிக்கபடாததால் மொபைல் கேட் கீப்பர் மூலம் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 6 மணி நேரத்துக்கு மேல் ஆகும் என ரெயில்வே கால அட்டவணை அறிவிக்கப்பட்டது.

தற்போது 12-ந் தேதி முதல் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி, ஆகிய நாட்களில் திருவாரூரில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 4.15மணிக்கு காரைக்குடி சென்றடையும் என்றும் மறுமார்க்கத்தில் காரைக்குடியிலிருந்து செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் காலை 9.45 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 5.45 மணிக்கு திருவாரூர் வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவாரூரிலிருந்து காரைக்குடி செல்ல 8 மணி நேரம் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை பொதுமக்களுக்கோ, ரெயில்வே நிர்வாகத்துக்கோ பயனற்ற வகையில் உள்ளது. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டம், எந்த பயனும் இன்றி உள்ளது.

இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து ரெயில்வே கேட்டுகளுக்கும், உடனடியாக நிரந்தர பணியாளர்களை, முழுநேரம் நியமித்து ரெயில் சேவையை முறையாக தொடரவேண்டும். மீட்டர் கேஜில் இயங்கியது போல காரைக்குடி- மயிலாடுதுறை இடையே தினசரி பயணிகள் ரெயில்களை இயக்க வேண்டும். மேலும் காரைக்குடி- சென்னை இடையே இரவு நேர விரைவு ரெயில்களை, தினசரி இயக்க வேண்டும். தென் மாவட்டங்களிலிருந்து நாகூர், வேளாங்கண்ணி, காரைக்கால் பகுதிகளுக்கு தினசரி ரெயில் இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

Next Story