பாம்பு கடித்தால் கடிபட்ட இடத்தை அசைக்க கூடாது தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பேச்சு


பாம்பு கடித்தால் கடிபட்ட இடத்தை அசைக்க கூடாது தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பேச்சு
x
தினத்தந்தி 14 Jun 2019 9:45 PM GMT (Updated: 14 Jun 2019 9:50 PM GMT)

பாம்பு கடித்தால் கடிபட்ட இடத்தை அசைக்க கூடாது என்று, தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் கூறினார்.

தஞ்சாவூர், 

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாம்பு கடி குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதற்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாம்பு வகைகளில் 30 வகையான பாம்புகள் தான் விஷத்தன்மை கொண்டவை. தஞ்சை பகுதிகளில் கட்டுவிரியன், கண்ணாடி விரியன், நல்லபாம்பு, சுருட்டை பாம்பு ஆகிய 4 வகையான பாம்புகள் அதிகமாக காணப்படுகின்றன. கண்ணாடி விரியன், சுருட்டை பாம்பு ஆகியவை கடித்தால் வீக்கம் ஏற்படும். நெறிக்கட்டிக் கொள்வதுடன் வீக்கம் அதிகரித்து கொண்டே இருக்கும். நல்லபாம்பு, கட்டுவிரியன் கடித்தால் கண்கள் செயல் இழந்து இமைகள் மூடிக் கொள்ளும். மூச்சுத்திணறல் ஏற்படும். நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படும்.

பாம்பு கடித்தவுடன் ஓடக்கூடாது. கடிப்பட்ட இடங்களை அசைக்கக்கூடாது. தேவையில்லாமல் பாம்பு கடித்த இடத்தை கத்தி அல்லது பிளேடால் கீறி விடக்கூடாது. நாய் கடித்தால் அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் பாம்பு கடித்தால் அந்த இடத்தை எதுவும் செய்யக்கூடாது. துணியால் கட்டு போடக்கூடாது. பாம்பு கடித்துவிட்டால் 108 ஆம்புலன்சிற்காக காத்திருக்காமல் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் ஏறி அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று ஊசி போட்டு கொள்ள வேண்டும்.

பாம்பு கடிக்கான மருந்து முழுமையாக அரசு மருத்துவமனைகளில் உள்ளது. நாட்டு வைத்தியம் பார்த்தால் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்பு உள்ளது. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு 1,100 பேர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 336 பேர் பாம்பு கடிக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். சராசரியாக மாதத்திற்கு 60 முதல் 70 பேர் பாம்பு கடியால் சிகிச்சைக்கு வருகின்றனர். பாம்பு கடித்தவுடன் பயப்படக்கூடாது. பயத்தினால் தான் உயிரிழப்பு அதிகரிக்கிறது. எனவே பாம்பு கடித்த ½ மணிநேரத்திற்குள் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் துணை முதல்வர் ஆறுமுகம், மருத்துவ கண்காணிப்பாளர் பாரதி, மருத்துவத்துறை தலைவர் நமச்சிவாயம், பேராசிரியர் பாஸ்கர், துணை பேராசிரியர்கள் வெண்ணிலா, கவிதா, ஸ்ரீராம்கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story