கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் : காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கை


கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் : காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Jun 2019 5:15 AM IST (Updated: 15 Jun 2019 3:30 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க வேண்டும் என கட்சி தலைமைக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மும்பை, 

நாடாளுமன்ற தேர்தலில் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடியால் காங்கிரஸ் கூட்டணி மராட்டியத்தில் சுமார் 10 தொகுதிகளில் தோல்வியை சந்தித்தது. எனவே அக்டோபர் மாத வாக்கில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அந்த கட்சியை கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டி வருகிறது.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தாதரில் உள்ள திலக்பவனில் நடந்தது. இதில் மாநில பொறுப்பாளர் மல்லிகார்ஜூன கார்கே, மாநில தலைவர் அசோக் சவான், மூத்த தலைவர் சுஷில்குமார் ஷிண்டே, முன்னாள் முதல்-மந்திரி பிரதிவிராஜ் சவான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது நிர்வாகிகள், சட்டசபை தேர்தலில் பிரகாஷ் அம்பேத்கருக்காக காத்திருக்காமல் கூட்டணி உறுதி செய்யப்பட்ட தேசியவாத காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க வேண்டும். பிரகாஷ் அம்பேத்கரை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்து நேரத்தை வீணடிப்பதை விட அவரால் வாக்குகள் பிரிவதை தடுக்க திட்டம் வகுக்க வேண்டும் என கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட தலைவர் ஒருவர் கூறும்போது:- வஞ்சித் பகுஜன் அகாடிக்கு காங்கிரஸ் கூட்டணியில் சேர விருப்பம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. எனவே பிரகாஷ் அம்பேத்கரை சமரசம் செய்ய முயற்சி செய்து நேரத்தை வீண்டிப்பதைவிட அவரை சமாளிக்க திட்டம் வகுத்து தேர்தலை சந்திக்கலாம். இதேபோல கடைசி நேரம் வரை இழுத்தடிக்காமல் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை விரைந்து முடித்தால் தொண்டர்கள் தேர்தல் பணியாற்ற வசதியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story