குமரி மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.2½ லட்சம் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்


குமரி மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.2½ லட்சம் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 15 Jun 2019 3:30 AM IST (Updated: 15 Jun 2019 3:35 AM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலத்தில் குமரி மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.2½ லட்சம் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

நாகர்கோவில்,

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமையில் கேரள மாநில மீன்வளத்துறை அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டம் சின்னத்துறையை சேர்ந்த ததேயூ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இரவிபுதூர்கடையை சேர்ந்த ஜாண்போஸ்கோ, சகாய ரூபன், சீலன், ஆற்றூரை சேர்ந்த ஜாண் ஜோதி, எல்வின், இரவிபுத்தன்துறையை சேர்ந்த ராஜேந்திரன், நிக்கோலாஸ், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த விஸ்வஜித் ஆகியோர் கடந்த மாதம் 2-ந் தேதி அன்று கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

ஒரு மாதமாக தங்கி மீன்பிடித்த அவர்கள் கேரள மாநிலம் காசர்கோடு கடல் பகுதியில் கடந்த 8-ந் தேதி வந்த போது திடீரென படகின் என்ஜின் பழுதானது. 2 நாட்களாக மீனவர்கள் கேரள மாநில கடல் பகுதியில் தத்தளித்தனர். காற்றும், மழையும் அதிகமாக இருந்ததால் உயிருக்கு போராடிய மீனவர்கள் ஒயர்லெஸ் மூலம் கேரள மாநில அழிக்கால் கடலோர காவல் குழுமத்தை தொடர்பு கொண்டு உதவி கோரினர்.

அதை தொடர்ந்து கடலோர காவல் குழும அதிகாரிகள் மீனவர்களை தொடர்பு கொண்டு காற்றும், மழையும் அதிகமாக இருப்பதால் தாங்கள் தத்தளிக்கும் பகுதிக்கு அருகில் காசர்கோடு மாவட்டம் தலங்கரை என்ற இடத்தில் கட்டப்பட்டுவரும் சிறிய மீன்பிடி துறைமுகத்துக்கு சென்று சேருமாறு வழிகாட்டினர். என்ஜின் பழுதடைந்ததால் ஒரு மணி நேரத்துக்கு ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவு தான் படகு நகர்ந்துள்ளது. மீனவர்கள் ஒருவழியாக 10-ந் தேதி அன்று காலை 10 மணி அளவில் அந்த துறைமுகத்திற்குள் சென்று சேர்ந்தனர். அவர்களை காசர்கோடு கடலோர காவல் குழுமத்தினர் உபசரித்து, உதவிகள் செய்தனர்.

இதற்கிடையே காசர்கோடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் சதீஷ் என்பவர் அங்கு வந்து மீனவர்கள் சந்தித்த பிரச்சினைகள் எதையும் விசாரிக்காமல், படகில் இருந்த 8 டன் மீன்களை அவருக்கு வேண்டிய மீன் வியாபாரி ஒருவருக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்தார். அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட தொகை ரூ.40 ஆயிரத்தையும் கொண்டு சென்றதோடு, தடைகாலம் தொடங்கி 10 மணி நேரம் தாமதமாக கரை வந்து சேர்ந்ததற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார். அபராத தொகையை செலுத்திய பிறகு மீன்வளத்துறை உயர் அதிகாரியை சந்தித்து விசைப்படகை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். மீனவர்களின் பழுதடைந்த படகை உடனடியாக விடுவிக்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story