சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம், போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருமால், பாலச்சந்தர், நீதிராஜன், ராமநாதன், மகேஷ், கனகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியதாவது:-
மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருந்தால் உடனே அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும்.
அதுபோல் வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். ஆறுகளில் மணல் கொள்ளை நடக்காமல் இருக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க முக்கிய சாலைகளில் தடுப்புக்கம்பிகள் அமைத்து சீரான வேகத்தில் வாகனங்கள் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுபோல் தொடர்ந்து ரவுடியிச செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தின் வழியாக வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு மதுபானங்கள் கடத்தலை தடுக்க மதுவிலக்கு சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story