மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக கூறி கள்ளக்குறிச்சி அரசு கல்லூரியில் பிரபு எம்.எல்.ஏ. தர்ணா


மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக கூறி கள்ளக்குறிச்சி அரசு கல்லூரியில் பிரபு எம்.எல்.ஏ. தர்ணா
x
தினத்தந்தி 15 Jun 2019 3:45 AM IST (Updated: 15 Jun 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக கூறி கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரியில் பிரபு எம்.எல்.ஏ. தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சியில் அரசு கலைக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்காக 500 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 1,503 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 396 இடங்களுக்கு மட்டும் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 104 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. மேலும் இந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது.

இதையறிந்த கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு நேற்று மதியம் 2 மணியளவில் கல்லூரிக்கு சென்று, அங்கிருந்த முதல்வர் முத்துசாமியிடம் கேட்டார். அதற்கு கல்லூரி முதல்வர் முத்துசாமி, பி.சி. மாணவர்களுக்கு 104 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று கூறினார். அதற்கு பிரபு எம்.எல்.ஏ., குறைவான மதிப்பெண் எடுத்தவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கல்லூரியில் சேர்த்துள்ளர்கள். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை காட்டவேண்டும் என கேட்டார். அதற்கு கல்லூரி முதல்வர் முத்துசாமி, சரியான பதில் அளிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பிரபு எம்.எல்.ஏ., மாணவர் சேர்க்கையில் முறைகேட்டில் ஈடுபட்ட முதல்வரை மாற்றவேண்டும். 20 சதவீதம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க வேண்டும். அதேபோல் காலியாக உள்ள 104 இடங்களை பொது பிரிவாக மாற்றி மாணவர்களை சேர்க்க வேண்டும் என கல்லூரியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இவருடன் மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் இளம்வழுதி, பிரபு எம்.எல்.ஏ.வை செல்போனில் தொடர்பு கொண்டு, 104 இடங்களை பொதுப்பிரிவு மாணவர்கள் சேரும் வகையில் செய்து தருவதாகவும், மேலும் 20 சதவீத மாணவர்களை கூடுதலாக சேர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும், கல்லூரி முதல்வரை மாற்றுவது சம்பந்தமாக பல்கலைக்கழக துணைவேந்தரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் கூறினார். இதையடுத்து இரவு 9.45 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story