சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ததற்கு எதிர்ப்பு, உப்பனாற்றின் குறுக்கே படகுகளை நிறுத்தி மீனவர்கள் போராட்டம்
கடலூர் துறைமுகத்தில் சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பனாற்றின் குறுக்கே படகுகளை நிறுத்தி வைத்து மீனவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைக்கோரி, சோனாங்குப்பம், ராசாப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன்பிடிக்க செல்வார்கள்.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரை (அதாவது இன்று) மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்தது. தடைகாலத்தில் சிறிய பைபர் படகுகளில் மட்டும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வந்தனர். விசைப்படகு மீனவர்கள் தங்களது படகு மற்றும் வலைகளை சீரமைப்பது, படகுகளுக்கு புதிதாக வர்ணம் தீட்டுவது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் சீரமைப்பு செய்த மீன்பிடி வலைகளை தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தில் இருந்து லாரிகளில் கடலூர் துறைமுகத்திற்கு மீனவர்கள் எடுத்து வந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட சுருக்குமடி மீன்பிடி வலைகளை ஏற்றி வந்ததாக கூறி, அந்த லாரிகளை முதுநகர் அருகே சிவானந்தபுரத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி வலைகளை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, வலைகளை பறிமுதல் செய்ததற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று துறைமுகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். துறைமுக மீன்பிடி தளத்தில் இருந்து முகத்துவாரம் வழியாக கடலுக்கு செல்லும் பாதையில் உப்பனாற்றின் குறுக்கே தங்களது விசைப்படகுகளை நிறுத்தி வைத்து அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க செல்பவர்கள், கடலுக்குள் செல்ல முடியாத நிலைக்கு ஆளானார்கள். அதோடு அதிகாலையிலேயே மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் தங்களது படகில் துறைமுகத்திற்கு திரும்பி வர முடியாமல் தவித்தார்கள். இதனால் அவர்கள் அருகே உள்ள சோனாங்குப்பம், அக்கரைகோரி கிராமத்தின் கடற்கரையோரம் தங்களது படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர்.
தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் துறைமுக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story