சம்பளம் வழங்காததை கண்டித்து, திண்டுக்கல் மாநகராட்சி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
சம்பளம் வழங்காததை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு அனைத்து துறை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு திண்டுக்கல் மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் கூட்டமைப்பின் செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். ஆலோசகர் வில்லியம் சகாயம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மாநகராட்சி ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5-ந்தேதி சம்பளம் வழங்கப்படும். ஆனால் தற்போது 14-ந்தேதி ஆகியும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை.எனவே சம்பளத்தை உடனே வழங்க மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதில் இருந்து தற்போது வரை பணி மூப்பு அடிப்படையில் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 4 பேருக்கு மட்டும் பதவி உயர்வுக்கான உத்தரவு வந்துள்ளது. அதில் உதவியாளர் நிலையில் உள்ள ஒருவருக்கு அரசியல் பிரமுகரின் செல்வாக்கை பயன்படுத்தி முறைகேடாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும். மேலும் முன்னாள் ஊழியர்கள் மாநகராட்சி அலுவலக நடவடிக்கைகளில் குறுக்கிடுகின்றனர். அவர் களை தடுக்க ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங் கள் எழுப்பப்பட்டன. அதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஆணையாளர் (பொறுப்பு) பாலச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் பேசினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் ஊழியர்களின் கோரிக்கைகளை ஆணையாளர் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது. இதையடுத்து ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் மாநகராட்சி அலுவலகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. வேலை நிறுத்தம் காரணமாக மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளும் பாதிக்கப்பட்டன.
Related Tags :
Next Story