கூடலூர் பகுதியில் அடிக்கடி மின்தடை, மின்வாரிய அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. ஆலோசனை
கூடலூர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
கூடலூர்,
கூடலூர், பந்தலூர் தாலுகாவில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் வாழைகள் சரிந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதம் அடைந்து வருகின்றது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. பெரும்பாலும் வனப்பகுதியில் மின்கம்பிகள் அறுந்து விழுவதால் மின் ஊழியர்களால் சீரமைப்பு பணியை விரைவாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வனப்பகுதிக்குள் செல்லும் மின்வழித்தட பாதைகளில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்ட மின்வாரிய ஊழியர்களால் முடியவில்லை. இதனால் வனத்துறையினரின் உதவியை நாடும் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் அடிக்கடி மின்தடை நிலவுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சீரான முறையில் மின்சாரம் வினியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கூடலூர் சட்டமன்ற அலுவலகத்தில் மின்வாரிய அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. திராவிடமணி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார், செயற்பொறியாளர்(பொது) ரமேஷ்குமார், ஊட்டி செயற்பொறியாளர் தேவராஜன் உள்பட மின்வாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது கூடலூர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பிறகு மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-
கூடலூர் பகுதியில் மின்வழித்தட பாதைகளில் மரக்கிளைகள் மின்கம்பிகளில் உரசி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் மரக்கிளைகளை வெட்ட வனத்துறையினரின் உதவியை நாட வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் தனியார் தோட்ட நிர்வாகங்கள் மரக்கிளைகளை வெட்டுவதற்கு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை. எனவே வனம் மற்றும் தனியார் தோட்டங்கள் வழியாக செல்லும் மின்வழித்தட பாதைகளில் மரக்கிளைகளை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூடலூர் பகுதியில் வருகிற 17-ந் தேதி மின்பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. பராமரிப்பு பணிக்காக கூடுதலாக மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட உள்ளனர். எனவே பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். மேலும் கூடலூர் பகுதியில் 110 கே.வி. துணை மின்நிலையம் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story